செவ்வாய், 24 ஏப்ரல், 2012
தமிழக அரசின் புதிய மின் கட்டண உயர்வுப் பட்டியல்
வியாழன், 15 மார்ச், 2012
இலங்கை நட்பு நாடு என்றால் தமிழ்நாடு உங்களுக்கு பகை நாடா?
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கக்கோரி இந்திய பிரதமருக்கு அனுப்பபட்ட கடிதத்தின் தமிழ் வடிவம்...
செவ்வாய், 3 ஜனவரி, 2012
வெகு மந்தமாக நடைபெறும் புயல் நிவாரணப் பணிகள்!
கடந்த டிசம்பர் 30ம் தேதி கடலூர் மாவட்டத்தையே ‘தானே’ புயல் புரட்டிப்போட்டது. பெரும்பாலான மரங்களும், மின்கம்பங்களும் வேரோடு சாய்ந்தன. ஆஸ்பெட்டாஸ் ஷீட்டால் கூரை வேயப்பட்ட பெரும்பாலான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் அனைத்தும் கூரை இழந்தன. சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மேற்கூரை ஏறக்குறைய 60 விழுக்காடு விழுந்துவிட்டது.
இந்த நிலையில் நிவாரணப் பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது. இதுவரை மக்களை அரசுத்துறை சார்ந்த எவரும் வந்து பார்க்கவில்லை. சேத்தியாத்தோப்பை பொறுத்தவரை வெளி உதவி எதுவுமின்றி மக்களே பெரும்பாலும் மரங்களையும் வீடுகளையும் சரிசெய்து கொண்டிருக்கிறார்கள். வசதியில்லாமல் தினக்கூலி சென்று வருபவர்கள் உணவிற்கு என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை.
மின்சாரம் இந்த நிமிடம் வரை முறைபடுத்தப்படவில்லை. ஊரில் பாதி அளவிற்கே இதுவரை மின்சாரம் வழங்கப்பட்டிருக்கிறது. மீதமுள்ள இடங்களுக்கு இன்னும் இரண்டு மூன்று நாட்கள் வரை ஆகும் என்று தெரிகிறது. இதைத் தவிர சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கு எப்போது மின்சாரம் தருவார்கள் என்று இதுவரை தெரியப்படுத்தப்படவில்லை. இதைவிடக் கொடுமை நேற்று வரை நெய்வேலிப் பகுதிகளான இந்திரா நகர் சுற்றியுள்ள பகுதிகளில் மின்வாரியம் எந்த வேலையும் ஆரம்பிக்கவில்லை. அறுந்து தொங்கிய கம்பிகள் அப்படியே தொங்கிக் கொண்டிருக்கின்றன.
சனி, 31 டிசம்பர், 2011
செவ்வாய், 1 நவம்பர், 2011
உறவுகள்

வானதிராயபுரத்தை தொடர்வண்டி அடைந்தபோது இரவு 1 மணி. இறங்கி எங்கு செல்வது என்று தெரியவில்லை. தூக்கமும் சுத்தமாக இல்லை. தூக்கம் எப்படி வரும்? சாதாரண செய்தியா அது! நெஞ்சில் ஈட்டியை இறக்கிவிட்டு அமைதியாக இரு என்றால் எப்படி இருக்கமுடியும்? அதுதான் அவர்கள் தடுத்தும் தாங்காமல் கிளம்பிவந்து, இதோ இறங்கிவிட்டேன். ஊரில் என்னை யாருக்காவது அடையாளம் தெரியுமா? எப்படித்தெரியும்? யாரிடம் சென்று கேட்பது?
அப்பா, அம்மாவையாவது அழைத்து வந்திருக்கலாம். அவசரத்தில் கிளம்பிவிட்டேன். அவர்களுக்கு வருத்தம் இருக்குமா? இருக்காதா பின்னே? இத்தனை வருடம் வளர்த்தவர்களல்லவா அவர்கள்? அவர்கள் வளர்த்தவர்கள் மட்டுமே என்று தெரிந்தவுடன் நான் உண்மை உறவுகளைத்தேடி திடீரென கிளம்பிவிட்டேனே! அவர்கள் மனம் என்ன பாடுபட்டிருக்கும்? எனக்கு ஒன்றும் குறைவைக்கவில்லை அவர்கள். பெற்றப்பிள்ளையைப் போலல்லவா பார்த்துக்கொண்டார்கள். அவர்கள் செய்தியைச் சொல்லவில்லை என்றால் கடைசிவரைக்கும் கூட எனக்குத்தெரியாமலேயே போயிருக்குமே! இவர்களைப் பார்த்தவுடன் திரும்பிச்சென்று அப்பாவிடமும், அம்மாவிடமும் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்கவேண்டும்.
சுற்றும் முற்றும் பார்த்தேன். தொடர்வண்டி சென்று நிறைய நேரம் ஆனபடியால் ஒருவரையும் காணவில்லை. இப்போது ஊருக்குள் செல்லமுடியாது. கிராமம் என்பதால் விடிந்தவுடன் செல்வது நல்லது. அங்கேயே ஒரு கட்டையில் அமர்ந்தேன். நிலைய மேலாளர் வந்து விசாரித்துவிட்டு சென்றுவிட்டார்.
உட்கார்ந்தேன். எனக்கு இப்போது வயது முப்பதை நெருங்கிக் கொண்டிருக்கிறது. எனக்கு திருமணம் செய்ய பெண்பார்க்கும் படலம் ஆரம்பிக்கப்பட்டபோதுதான் இந்த செய்தி வெளிவந்தது. அப்பாவும், அம்மாவும் சொல்லும்போதே கலங்கிக் கொண்டுதான் இருந்தார்கள். இதோ அவர்களிடம் சொல்லாமல் வேறு அலுவலகத்திலிருந்து நேரே தொடர்வெண்டி ஏறி வந்துவிட்டேன். சொன்னால் விட்டு சென்று விடுவானோ என்ற அவர்கள் கவலை உண்மையானது. அணைத்து வைத்திருந்த கைபேசிக்கு உயிர் கொடுத்து நள்ளிரவானாலும் பரவாயில்லை என்று அவர்களை அழைத்தேன். எதிர்பார்த்தபடியே முதல் மணியிலேயே தொலைபேசியை எடுத்தார்கள். அவர்களின் அழுகைக்கு இடையே சூழ்நிலையை விளக்கிவிட்டு நிச்சயம் வந்துவிடுவேன் என்று கூறி வைத்தேன். மனமும், முதுகும் பின்னோக்கிச் சென்றன.
அவர்கள் சொன்னதன் சுருக்கம் இதுதான். நான் அவர்களுக்கு பிறந்தவனில்லை. நெல்லை மாவட்டத்தில் உள்ள வானதிராயபுரத்தைச் சேர்ந்தவன். அந்த காலத்தில் குழந்தை இல்லை என்று கோவில் கோவிலாக அவர்கள் அலைந்தபோது அவர்களின் கண்ணில் பட்டவன் நான். என்னுடைய அக்கா தவறுதலாய் அவர்களின் வண்டியில் விழுந்து அடிபட்டு விட்டாளாம். அப்போது எனக்கு ஒரு வயதாம். சாலையின் ஓரத்தில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தேனாம். அக்காவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் எங்களுக்கு என்று யாரும் இல்லையென்றும், என் அக்காதான் என்னைக் காப்பாற்றுகிறாள் என்றும் அறிந்துகொண்டார்களாம். என்னுடைய முகம் அவர்களை வசீகரிக்க என் அக்காவிடமும், ஊராரிடமும் பேசி என்னை இங்கு அழைத்து வந்து விட்டார்களாம். அன்றிலிந்து இன்று வரை எனக்கு எந்த குறையும் இல்லாமல் வளர்த்தும் வருகிறார்கள். சரி, என் உண்மையான பெற்றோர் என்ன ஆனார்கள் என்று கேட்டேன். அவர்கள் இருவரும் ஏதோ அப்போது நடந்த சாதி மோதலில் இறந்துபோனார்கள் என்று சொன்னார்கள்.
என் அக்கா எப்படியிருப்பாள்? அப்பா, அம்மாவை இழந்து என்னை வளர்க்க என்ன பாடுபட்டிருப்பாள்? ஒரு குழந்தை இன்னொரு குழந்தையை வளர்க்க வேண்டுமெனில் அக்காவிற்கு மனம் எப்படி பக்குவப்பட்டிருக்கும்? இத்தனைக்கும் அப்போது என்னை விட எட்டு வயதுதான் மூத்தவள் என்று வேறு சொன்னார்கள். ஒன்பது வயதில் என்னை வளர்க்க என்னென்ன வேலைகள் பார்த்திருப்பாள்? என் பெற்றோர் இறந்து மூன்று மாதங்கள் வரையில் என் அக்கா என்னைக் காப்பாற்றினாள் என்று சொன்னார்கள்? அந்த மூன்று மாதங்களும் ஒன்பது வயதில் தன் ஆசைகளை விழுங்கிவிட்டு என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள் என்றால் எப்படி முடிந்திருக்கும்? வேறு ஏதாவது உறவினர்கள் இருக்கிறார்களா? அக்கம் பக்கத்தினர் உதவி செய்தார்களா? என்ற எந்த கேள்விகளுக்கும் இவர்களிடம் விடை இல்லை. என் அக்காவையும் ஏன் அழைத்துக் கொண்டு வரவில்லை என்று கேட்டதற்கு மட்டும் அவளையும்தான் அழைத்தோம். கடைசிவரை அவள் வர விரும்பவில்லை என்று பதில் வந்தது.
இவையெல்லாம் சேர்ந்துதான் என்னை இங்கே கொண்டுவந்து சேர்த்து விட்டது. அக்காவைக் கட்டாயம் பார்க்கவேண்டும். இப்போது எப்படியிருப்பாளோ? அவளையும் அழைத்து சென்று என் கூட வைத்திருந்து என் வாழ்நாள் வரை அவளுக்குப் பணிவிடைகள் செய்யவேண்டும். இன்று நான் நல்ல உத்தியோகத்தில் இருக்கிறேன். மாதம் பல ஆயிரங்கள் சம்பாதிக்கிறேன். என் அக்காவிற்கு நல்லதொரு வாழ்க்கையை ஏற்படுத்தித் தரவேண்டும் என்ற பல எண்ணங்களோடு இரவு கழிந்தது. கிழக்கே சூரியன் தெரிந்தது. மக்கள் எழுந்து நடக்க ஆரம்பித்திருந்தார்கள். நானும் எழுந்து ஊருக்குள் சென்றேன்.
அதிகாலையில் ஒரு புதுமுகம் ஊருக்குள் வருவதை அனைவரும் ஒரு மாதிரியாய் பார்த்துவிட்டு அவரவர் வேலையைப் பார்க்க ஆரம்பித்தனர். யாரும் என்னிடம் வந்து என்ன என்றும் கேட்கவில்லை. எனக்கும் அவர்களை விசாரிக்கத் தோன்றவும் இல்லை. வயதானவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று மட்டும் பார்த்துக்கொண்டே சென்றேன். நினைத்தது போலவே கோவில் திண்ணையில் இரு பெருசுகள் உட்கார்ந்துகொண்டு சுருட்டை சுகமாக இழுத்துக் கொண்டிருந்தது. நேரே அவர்களிடம் போய் நின்றேன்.
“யாருப்பா அது. புதுசா இருக்கே?“ – என்றார் ஒருவர்.
“ஐயா. என் பேரு பிரபாகரன். நான் சென்னையிலிருந்து வர்றேன்“ என்றேன்.
“சொல்லுப்பா. என்ன வேணும். யாரு வீட்டுக்குப் போகணும்?”
“ஐயா. நானும் இந்த ஊரைச் சேர்ந்தவன்தான். முப்பது வருஷத்துக்கு முன்னால என்னோட அக்காக்கிட்டேயிருந்து என்னை ஒருத்தர் தத்தெடுத்துட்டுப் போனார். இப்பதான் எனக்கு அந்த விஷயமே தெரியும். அதான் அக்காவைப் பார்க்க வந்தேன்.”
“சரியா புரியலேயே தம்பி. உங்க அக்காகிட்டேயிருந்தா. உங்க அப்பா, அம்மா இல்லியா?”
“அவங்க ஏதோ சாதி கலவரத்துல இறந்துட்டாங்களாமே?”
“நம்ம பழனியம்மாப் பிள்ளையோட தம்பியா?” என்று யோசித்தார் என்று பெரியவர். அதுவரை சுருட்டை இழுத்துக் கொண்டிருந்த இன்னொருவரும் என்னை நன்றாக உற்றுப் பார்த்தார்.
“உன்னை அழைச்சிட்டுப் போம்போது உனக்கு ஒரு வயசா? உங்க அக்காவுக்கு ஒரு பத்து வயசு இருக்குமா?” என்று கேள்வி கேட்டார் அந்த பெரியவர்.
“இருக்கும் ஐயா” என்றேன்.
“அடே. நம்ம வீரமணியா நீ? பொறந்தவுடனே நல்லா வீர் வீர்..னு சத்தமா அலறுன. அதனாலேயே உங்கம்மா உனக்கு வீரமணின்னு ஆசையா பேர்வச்சுது. நீ என்னப்பா பேரெல்லாம் மாத்தி சொல்றே. அதான் புரியல. ஏலே முப்பது வருஷத்துக்கு முன்னால தத்தெடுத்துட்டுப் போனாங்களே. அதான் பழனியம்மா தம்பி வந்திருக்கான்” என பெருங்குரல் கொடுத்தார் அந்த பெரியவர். அதைக்கேட்டு அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் அனைவரும் வந்து என்னை ஆச்சர்யத்துடன் பார்த்தார்கள். கூட்டத்தினுள் ஒருவரை விடாமல் என் கண் தேடியது. இதில் அக்கா இருப்பாளா? இருந்திருந்தால் இந்நேரம் ஓடி வந்து என்னை உச்சி முகர்ந்திருக்க மாட்டாளா?
“ஏம்பா. இப்பதான் இங்கவர வழி தெரிஞ்சுதா?” கூட்டத்திலிருந்து ஒரு குரல் உரிமையோடு கேட்டது.
“இல்லைங்க. எனக்கு விஷயம் தெரியாது. இப்பதான் தெரியும்” பதில் சொல்லிவிட்டு பெரியவரைப் பார்த்தேன். “ஐயா எங்க அப்பா, அம்மா எப்படி இறந்தாங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?” என்று கேட்டேன்.
“அதை ஏம்ப்பா கேட்குற. அந்த காலத்துல எல்லாம் அரசியல்காரனுவ என்ன சொல்றானோலோ அதான எல்லாம் கேட்டான். இப்ப இருக்குற மாதிரி சொந்த புத்தி இருந்துதா? சாதியைச் சொல்லி சொல்லியேதான் எல்லாரையும் கொம்பு சீவி விட்டுருப்பானோ? அப்படி அலைஞ்ச பயதான் உங்கப்பனும். சாதிக்கட்சிக் காரங்க மறியல்னு கூப்பிட்டா ஓடுவான். ஆர்ப்பாட்டம்னு கூப்பிட்டா உங்கம்மா கர்ப்பம்னு கூட பார்க்காம கலந்துகிட்டு ஜெயிலுக்கு போவான். இவனோட துடிப்பைப் பார்த்துட்டு எதிர்கோஷ்டிக்காரங்களே உங்கப்பாவை கொன்னுட்டானோ. காப்பாத்தப் போன உங்கம்மாவும் செத்துப் போச்சி. கொன்னவனோ ஜெயிலுக்குப் போயிட்டு வந்து இன்னிக்குப் பெரிய ஆளுங்க. அவனுகள நீ பாக்கக்கூட முடியாது. உங்கப்பா உயிரையே வைச்சிருந்த அந்த அரசியல் தலைவரும் உங்களை வந்து பார்த்து ஆறுதல் கூட சொல்லலை. மேடையில மட்டும் பேசி தன் சொந்தபலத்த பெருக்கிக்கிட்டான் பண்ணாடை”.
கடைசியாக மனதை அரித்திருந்த அந்தக் கேள்வியைக் கேட்டேன். ‘என் அக்கா எங்க இருக்காங்க ஐயா’
“உங்க அக்கா ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி செத்துப்போச்சி தம்பி”
அவர் சொன்னதைக் கேட்டு தலையில் மீண்டும் இடி இறங்கியது போலிருந்தது. பக்கத்தில் இருந்த தூணைப் பிடித்தும் மயக்கம் வந்து சரிந்தேன். விழித்தபோது முகத்தில் தண்ணீர் தெளித்திருந்தது. சோடைவை வாயில் புகட்டிக் கொண்டிருந்தார்கள். இவ்வளவு ஆசையாகப் பார்க்க வந்த அக்கா இன்று உயிரோடு இல்லையா? என்னை வளர்த்தவளை வைத்து பாதுகாத்து வளர்க்கவேண்டும் என்று வந்தேனே. இரண்டு வருடத்திற்கு முந்தியே வந்திருக்க்க்கூடாதா?
கலங்கிய கண்களுடன் நான் படுத்திருப்பதைப் பார்த்த அந்த பெரியவரே ஆரம்பித்தார்.
“உன்ன அவங்க அழைச்சிட்டுப் போனப்பறும் உங்க அக்கா பழனியம்மா இங்கதான் எல்லார் வீட்டுலேயும் இருக்குற வேலையை செஞ்சிகிட்டு அவங்க கொடுக்கிறத வாங்கி சாப்பிட்டுகிட்டு வளர்ந்தா. கொஞ்சம் பெரிய மனுஷி ஆனவுடனே காட்டு வேலைக்கெல்லாம் போக ஆரம்பிச்சா. பக்கத்து ஊருல ஆதரவில்லாம திரிஞ்ச ஒருத்தனுக்கும் உங்க அக்காவுக்கும் ஊர்காரங்க பாத்து கல்யாணம் முடிச்சி வச்சாங்க. உங்க அக்காவுக்கு ஒரு பொம்பள குழந்தையும் பொறந்துச்சி. ஆனா அவ வூட்டுக்காரன் உங்க அக்கா மேல சந்தேகப்பட்டுகிட்டு விட்டுட்டு போயிட்டான். அதுக்கப்புறம் உங்க அக்காதான் தனியாளா இருந்து அந்த பிள்ளையை வளர்த்தா. ஒருநாள் காட்டுக்கு வேலைக்குப் போனவ பொணமா கிடந்தா. என்ன நடந்துச்சின்னு தெரியல. நாங்களே எடுத்து அடக்கம் பண்ணிட்டோம்.”
அவர் சொல்ல சொல்ல என் நெஞ்சே வெடித்துவிடும் போலிருந்தது. என்ன நடந்தது என்றே தெரியவில்லையா?
:”என்ன நடந்துச்சி. யாராவது கொன்னுட்டாங்களா?”
“செத்ததுக்கப்புறம் அதெல்லாம் விசாரிச்சு என்ன ஆகப்போகுது தம்பி. அதான் அதைப்பத்தி விசாரிக்கலை.”
பெண் உயிர்களுக்கு அவ்வளவுதான் மதிப்பா? அனாதையாகவே இருந்தாலும் அதுவும் ஒரு உயிர் அல்லவா? மனித உரிமைப் பற்றி தெரிந்தவர்கள் இங்கே ஒருவர் கூட இல்லையா? கிராமங்களில்தான் மனிதம் வாழ்கிறது என்கிறார்களே. அதுவும் உண்மை இல்லையா? கிராமங்களும் நகரங்கள்போல் இயந்திரத்தனமாக மாறிவருகிறதா? ஆயிரம் சிந்தனைகள் மனதில் ஓடின. அப்போதுதான் அக்காவின் குழந்தைப் பற்றி சொன்னது ஞாபகம் வந்தது.
“அக்காவுக்கு ஒரு குழந்தை இருந்தது என்று சொன்னீர்களே. குழந்தை இப்போது எங்கே?”
“அந்த புள்ளையும் உங்க அக்கா மாதிரி அனாதையாயிடுச்சி. மெட்ராஸிலிருந்து அனாதை ஆசிரமத்தைச் சேர்ந்த ஒருத்தர் அவரு விஷயமா இங்க வந்தப்ப விஷயத்தைக் கேள்விப்பட்டு நானே எங்க ஆசிரமத்துல வச்சி வளர்த்துக்கிறேன் என்று குழந்தையைக் கேட்டார். அந்த குழந்தையும் ஏன் கஷ்டப்படணும்னு நாங்க அவருகிட்ட கொடுத்துட்டோம்.”
“அவரு யார் தெரியுமா? ஆசிரமம் பேர் தெரியுமா?”
“அதெல்லாம் தெரியாது தம்பி. மெட்ராஸ் அது மட்டும்தான் தெரியும்.”
“அழைச்சிகிட்டுப்போய் எத்தனை வருஷம் ஆகும்?”
“ஒரு நாலைஞ்சு வருஷம் இருக்கும்”
அவர்களிடம் உதட்டளவில் விடைபெற்று தொடர்வண்டி ஏறினேன். எங்கே கொடுத்திருப்பார்கள் குழந்தையை. அக்குழந்தை அனாதையா? இல்லை நான் இருக்கிறேன். எந்த ஆசிரமம் என்று தேடுவது? ஒருவேளை யாராவது குழந்தையை விற்பவர்கள் வாங்கிச் சென்றிருப்பார்களோ? அதைக்கூட விசாரிக்காமல் குழந்தையை தூக்கிக் கொடுத்திருக்கிறார்களே. முதலில் எல்லா ஆசிரமத்தையும் தேடிப் பார்ப்போம். இல்லையென்றால் பிறகு மற்ற முயற்சிகளை எடுப்போம். எப்படியும் குழந்தையைக் கண்டுபிடித்தை தீரவேண்டும். என் அக்கா எனக்கு செய்த பணிவிடையை அந்த குழந்தைக்கு செய்து பரிகாரம் தேடவேண்டும்.
சரியான தூக்கம் இல்லாததால் கண்கள் இழுத்தது. ஆனால் மனம் மட்டும் தூங்காமல் ஆயிரம் செய்திகளை அசைப்போட்டுக் கொண்டிருந்தது. தொடர்வண்டி செல்லும் ஒலி மட்டும் காதில் கேட்டுக் கொண்டிருந்தது.
















