
பணம் சம்பாதிக்க பலவழிகள் உண்டு. ஒன்று நல்ல வியாபாரம் செய்யலாம். இரண்டு மிரட்டி கொள்ளையடிக்கலாம். மூன்று பிச்சை எடுக்கலாம். நான்கு திருடலாம். இவை அனைத்தையும் ஒன்றாக செய்தால்... அதுதான் இன்று பல கோவில்களில் நடைபெறுகிறது. அதில் நான் இதுவரையில் கண்ட கோவில்களில் முதன்மையாக கருதுவது திருமணஞ்சேரி கோவில். ஏற்கனவே ராமேஸ்வரம் கோவிலுக்கு சுற்றுலாவாக சென்று அங்கு வசூல் என்ற பெயரில் நடக்கும் கொள்ளையில் மனம் வெறுத்தவன் நான்.
தமிழகத்தில் அறநிலையத் துறை என்று கோவிலுக்கு தனியாக ஒரு துறை இருந்தும் இதுபோன்ற கொள்ளை சம்பவங்களை தடுக்க முடியவில்லை. அர்ச்சனைக்கென்று பெறும் துண்டு சீட்டைத் தவிர அவர்கள் வாங்கும் வேறு எந்தவிதமான பணத்திற்கும் எந்த ஒரு ரசீதும் தருவதில்லை. அப்படியானால் இந்த பணமெல்லாம் எங்கே செல்கிறது?

திருமணஞ்சேரி - ஒரு பார்வை
திருமணஞ்சேரி கோவில் என்பது மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் செல்லும் பாதையில் குத்தாலம் அருகே இரண்டு கி.மீ. தொலைவில் உள்ள ஒரு கோவில். இந்தக் கோவிலில் திருமணம் ஆகாதவர்கள் திருமணம் ஆக வேண்டியும், திருமணம் ஆனவர்கள் ஏற்கனவே வேண்டிக்கொண்டபடி தங்கள் துணையுடன் வந்து வணங்க வேண்டியும் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் வந்து செல்கிறார்கள். இதனால் கோவில் நிர்வாகத்தினரின் வசூல் கெடாமல் இருப்பதற்காக இந்தக் கோவிலில் மட்டும் ராகுகாலம், அமாவாசை, கரிநாள், எமகண்டம் என்று எந்தவிதமான கெட்ட நாளோ, கெட்ட நேரமோ இல்லை என்று இவர்களாகவே அறிவித்துக் கொண்டே இருக்கிறார்கள். அப்படி ஒரு நாள் இருந்து அதனால் இவர்கள் வசூல் பாதித்துவிட்டால் என்னாவது?
இந்தக் கொடுமையில் எங்கள் வீட்டு பெரியவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நானும் செல்லவேண்டிய சூழ்நிலை. எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாத நிலையில், நானும் முடிந்த வரை இந்த நிகழ்வை கடந்த இரண்டு வருடமாக தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தேன். கடைசியாக வேறு வழியின்றி இந்த மாதத்தில் மகாத்மா பிறந்த நாளில் செல்வதென முடிவு செய்யப்பட்டு, அனைவரும் கிளம்பிச் சென்றோம்.
ஒருவரிடம் வசூலாகும் தொகை
நாங்கள் சென்ற கார் அங்கு நின்றவுடன் ஒருவன் ஓடி வந்தான். எங்கள் கார் ஓட்டுனரிடம் ஏற்கனவே தெரியுமா? புதிதா? என்று கேட்டான். எங்கள் ஓட்டுனர் தெரியும் என்றார். அவன் சென்று விட்டான். எங்கள் ஓட்டுனர் ஒரு கடைக்கு எங்களை அழைத்துச் சென்றார். அங்கு பூசைக்கென்று ஒரு பையைத் தந்தார்கள். அதில் இரண்டு தேங்காய் மற்றும் மாலை என்ற பெயரில் ஒன்றரை முழத்தில் பூவும் இருந்தது. இதற்கு கடைக்காரர் கேட்ட தொகை 120 ரூபாய். இதற்கு எதற்கு இவ்வளவு தொகை என்று நான் திருப்பி கேட்டதற்கு, கடைக்காரர் சொன்ன பதில், "கோவில்காரர்களிலிருந்து நீங்கள் வந்த டிரைவர் வரை எல்லோருக்கு கமிஷன் தரணும் சார்!"
வேறுவழியின்றி, அந்தப் பையை வாங்கிக் கொண்டு கோவிலை நோக்கி நடந்தேன். அங்கே வருபவர்கள் அனைவரும் கட்டாயம் நெய்விளக்கு ஏற்றவேண்டும் என்று 10 ரூபாயைப் பறித்துக் கொண்டு, விளக்கினை கையில் திணித்தார்கள். அதன்பிறகு, அர்ச்சனை ரசீது என்று 15 ரூபாய்க்கு ஒரு ரசீது தந்தார்கள். இந்த 15 ரூபாய்க்கு மட்டும்தான் ரசீது தரப்பட்டது.
பிறகு கோவிலுக்குள் என்னை ஓட்டிச் சென்றார்கள். வேறு எப்படி சொல்வது என்று தெரியவில்லை. வீட்டாரின் வற்புறுத்தல், என்னால் சிந்திக்க முடிந்தாலும் செயல்படுத்த முடியாத நிலையில் ஒரு மிருகம் என்றுதான் என்னைக் குறிப்பிட்டுக் கொள்ளவேண்டும். அங்கு முதலில் விளக்கை ஏற்றச் சொன்னார்கள். பிறகு ஒரு வரிசையில் உட்கார்ந்திருந்த பலரோடு நானும் உட்கார வேண்டியிருந்தது. சிறிது நேரத்தில், எங்களை உள்ளே அழைத்து எங்கள் கையில் இருந்த பையை வாங்கிக் கொண்டு சென்றார்கள். அந்தப் பையை வாங்கும் போது அவர்கள் எங்கள் பெயரை கேட்டவிதமும், யாராவது மிகப் பொறுமையாக சொன்னால் அவர்களை திட்டிய விதமும், நாங்கள் ஏதோ அவர்களிடம் பிச்சையோ அல்லது கடனோ வாங்க வந்ததுபோல் இருந்தது.

பிறகு அங்கிருந்தவர்களில் மூத்தவர் ஒருவர், ஒரு மைக்கை கையில் எடுத்து, ஒரு தொழில் அபிவிருத்தி மேலாளர் போல கோவிலைப் பற்றி விளம்பரப் படுத்தினார். அப்போதுதான் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம், இங்கு ராகுகாலம் கிடையாது, எமகண்டம் கிடையாது என அனைவரையும் தெளிவுப்படுத்தினார். முழுக்க முழுக்க தங்கள் வருமானம் பாதிக்கப்படக்கூடாது என்பதில் அனைவரும் தெளிவாக இருந்தனர். பிறகு மாலை என்ற பெயரில் பையில் இருந்த பூவை எங்கள் கழுத்தில் போட்டுக்கொள்ள சொன்னார்கள்.
அதன்பிறகு ஒவ்வொருவராய் வரவழைத்து அந்த மாலையை மடித்து, நாங்கள் கொடுத்த பையிலேயே மடித்து வைத்து, அதனில் ஒரு விபூதி பொட்டலத்தை போட்டு, பையை எங்கள் கையில் கொடுத்து, வேறு வழியாக அனுப்பினார்கள். அங்கு வாசலிலேயே ஒருவர் நின்றுகொண்டு, எங்களிடமிருந்து 10 ரூபாயை ஏறக்குறைய வழிப்பறி மாதிரி பிடுங்கிக் கொண்டிருந்தார். அங்கிருந்து வெளிவரும் வழியில், வேறுவழியில் எங்களை அனுப்பி கட்டாயம் அனைவரும் கேதுவுக்கு விளக்கு ஏற்றவேண்டும், அப்போதுதான் வேண்டுதல் பலிக்கும் என்று 10 ரூபாயை பறித்துக் கொண்டு, விளக்கை எங்கள் கையில் திணித்து ஏற்றச் சொன்னார்கள்.
இதுமட்டுமில்லாமல், அன்னதானம் வசூல் என்று ஒருவர் உட்கார்ந்து கொண்டிருந்து பணம் வாங்கிக் கொண்டிருந்தார். அதிலும் நூறு ரூபாய்க்கு மேல் தந்தால் மட்டுமே கையெழுத்து போட்டு ரசீது தருவோம் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். நல்லவேளை வற்புறுத்தவில்லை. ஆக மொத்தம் வேண்டுதல் என்ற பெயரில் ஒருவர் உள்ளே சென்று வர 120+10+15+10+10 என 165 ரூபாய் கோவிலில் கட்டாயம் தரவேண்டும். இது இல்லாமல் நீங்கள் தனியே உங்கள் விருப்பத்திற்கு வேறு ஏதாவது கோவிலுக்கு செய்ய நினைத்தால் அது உங்கள் விருப்பம். இந்தப் பணத்தில் 15 ரூபாய்க்கு மட்டுமே உங்களுக்கு ரசீது கிடைக்கும். அதாவது மொத்தப் பணத்தில் 9 விழுக்காட்டிற்கு மட்டுமே.
இதேபோல், ராமேஸ்வரம் கோவிலுக்கு சுற்றுலா சென்றபோது நான் வருத்தப்பட்டதுண்டு. ஆனாலும் அங்கு முன்பே அனைத்துப் பணத்தையும் பிடுங்கிக் கொள்கிறார்கள். ஆனால் இங்கோ, மூளைக்கு மூளை நின்று கொண்டு வெளிவருவதற்குள் ஒருவழியாக்கி விடுவார்கள். இதில் ஏழை, பணக்காரன் என்று கிடையாது.
அறநிலையத்துறைக்கு ஒரு வேண்டுகோள்!
தமிழக மக்கள் அனைத்து நம்பிக்கையையும் இழந்துவிட்டுதான் கடவுள் என்ற ஒன்று இருப்பதாக நினைத்துக் கொண்டு கோவிலுக்கு வருகிறார்கள். அதிலும் அன்று நான் பார்த்தவர்களில் பலபேர் பொருளாதார சூழ்நிலையாலேயே திருமணம் ஆகாதவர்கள் என்று பார்த்தவுடனே புரிந்துகொள்ளக்கூடிய நிலைமையிலேயே இருந்தார்கள். அவர்களிடமிருந்து அவர்களுடைய நம்பிக்கையை பகடைக்காயாக்கி பணம் பறிப்பதென்பது, எரிகிற வீட்டில் கிடைக்கும் வரை பிடுங்கும் பொறுக்கிகளுக்கு ஒப்பாகும். தமிழக அறநிலையத் துறைதான் இதனை உடனே கவனித்து, இதுபோல் கொள்ளையடிக்கும் கும்பலை தடுத்து நிறுத்த வேண்டும். கணக்கு வழக்கில்லாமல் ஒரு சாராருக்கு மட்டும் சென்ற சிதம்பரம் கோவில் பணத்தை நீதிமன்றம் மூலம் நெறிப்படுத்தி, அரசுத் துறைக்கு பெற்றதுபோல் அனைத்து கோவில்களிலும் செய்தால் கடவுள் விரும்பிகள் இன்னும் மகிழ்வார்கள் என்பது என் எண்ணம்.
குறிப்பு - என் விளக்கம்
"இவ்வளவு தூரம் கடவுளைத் திட்டும் நீ ஏன் கோவிலுக்கு சென்றாய்? வீட்டிலுள்ளவர்கள் வற்புறுத்தினார்கள் என்பது ஒரு பேச்சு. இப்படித்தான் பல பகுத்தறிவுவாதிகள் (நாத்திகர்கள்) இருக்கிறார்கள். உங்களுக்கெல்லாம் வெளியில் ஒரு வேடம். உள்ளே வேறு வேடம்" என ஒரு சாராரின் கேள்வி என் காதில் விழுகிறது. அவர்களிடம் நான் கோவிலுக்கு சென்றதற்காக முதலில் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் சொல்வதுபோல் நான் சென்றிருக்கக் கூடாதுதான். ஆனால் என் முடிவை நானே எடுக்கும் நிலைக்கு இன்னும் நான் வரவில்லை. என் செய்வது? "கடவுள் உண்டென்பார் சிலர்; இல்லையென்பார் சிலர்; எனக்கில்லை கடவுள் கவலை" என்ற பாரதிதாசனின் பக்கம் நான். கடவுள் இருந்தாலும் மகிழப் போவதில்லை. இல்லையென்றாலும் மகிழப் போவதில்லை. என் வேலையை நான் பார்ப்பவன். யாராவது மனதளவில் புண்பட்டிருந்தால் நான் மீண்டும் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தச் சூழ்நிலையில் கடவுளை நம்பும் நீங்களாவது எங்களைப் போன்றோர் குறை சொல்லாதவாறு இந்த நிலைமையை சரி செய்து கொடுங்களேன். எங்கள் மக்கள் மகிழ்ந்து போகட்டும். அதுவரை நாங்கள் சொல்லிக்கொண்டுதான் இருப்போம். பணம் சம்பாதிக்க பலவழிகள் உண்டு. ஒன்று நல்ல வியாபாரம் செய்யலாம். இரண்டு மிரட்டி கொள்ளையடிக்கலாம். மூன்று பிச்சை எடுக்கலாம். நான்கு திருடலாம். இவை அனைத்தையும் ஒன்றாக செய்தால்... அதுதான் இன்று பல கோவில்களில்................... ... ...
2 comments:
As far as I know, hindus (we) only asking money to show the GOD. Even the GOD could not change this. It does not make sense to me that "there is a god"
You are cent percent correct. I believe and love God but cheating in Temple is frustrated me.
Eye opening article.
Regards
Adirai Thanga Selvarajan
கருத்துரையிடுக