சனி, 12 டிசம்பர், 2009

ராசிபலன்: இடைத்தேர்தல் தொகுதி மக்களுக்கு....

திருச்செந்தூர், வந்தவாசி பகுதி மக்களே....
  • இந்த ஒரு மாதத்திற்கு உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

  • தமிழகம் முழுதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உங்கள் பகுதிக்கு 24 மணி நேரமும் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்படும்.

  • அரசியல்வாதிகள் இதுவரை சேர்த்துவைத்த பெட்டிகளில் ஒரு சில வெளிவந்து உங்களுக்கு தரிசனம் தரும்.

  • நாட்டு பிரச்சனை மறக்கடிக்கப்பட்டு ஊடகங்கள் உங்கள் பகுதி தேர்தல் செய்திகளுக்கு முக்கியத்துவம் தரும்.

  • கலர் டி.வி.யும், கலர் காகிதங்களும் டாடா சுமோவில் வலம் வரும்.

  • சாதிப் பிரச்சனை தலைதூக்கி தன் சாதிக்காரன் இருந்தால் கண்மூடி ஓட்டுபோடச் சொல்லி தலையில் கொட்டும்.

  • கட்சிகள் எதிரணியினரை பற்றி குறை சொல்லுமே தவிர தங்கள் சாதனைகளாக ஒன்றும் சொல்லாது.

  • வாய்க்கு வந்ததையெல்லாம் வாக்குறுதிகள் என்று சொல்லும்.

  • கட்டிங் குடித்த குடிமகன்களுக்கு இந்த ஒரு மாதம் குவார்ட்டர் அடிக்கும் அளவுக்கு வசதிகள் பெருகும்.

  • பழுதடைந்த பல்லிளித்த சாலைகள் சீர்செய்ய வேலைகள் ஆரம்பிக்கும். (ஆரம்பம் மட்டும்தான்...)

  • கட்சி தொண்டர்களுக்குள் வெட்டு குத்து நடக்க வாய்ப்பு உண்டு.

  • அறுக்கப்போகும் ஆட்டுக்கு செய்யும் அனைத்து மரியாதைகளும் உங்களுக்கும் நடக்கும்.

  • இரவில் பணப்பட்டுவாடா நடக்க வாய்ப்பு அதிகம். தூங்கி விடாதீர்கள்.

  • மேடைப்பேச்சு என்ற பெயரில் உங்களக்கு அணுஅணுவாக சித்திரவதை நடக்கும்.

  • ஆடு,கோழிகள் தொலைந்து போக அதிக வாய்ப்பு. பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்.
அனுகூலமான நேரம்: தினமும் இரவு 10 மணிக்கு மேல் (காந்தி சிரித்து வருவார்)

நல்ல நாட்கள்: டிசம்பர் 18 வரை. அதற்கு பிறகு இரண்டு வருடத்திற்கு சனிப்பார்வை உங்கள் மேல் தீர்க்கமாக இருக்கும்.

பரிகாரம்: உங்கள் ஜனநாயக கடமை முடிந்தவுடன் நாமக்கட்டி இருந்தால் நாமம் போட்டுக்கொண்டு கோவணம் கட்டி உலாவருவது நல்லது. தேர்தலுக்குப் பிறகு அவர்கள் நாமம் போடுவதற்கு முன்பு நாமே போட்டுக்கொண்டோம் என்ற திருப்தியாவது கிடைக்கும்.

ஞாயிறு, 6 டிசம்பர், 2009

பாபரும்... ராமரும்...

'


ஒவ்வொரு வருடமும் இந்த நாள் வரும்போது எங்கே என்ன நடக்கப் போகிறதோ என்ற ஒரு பதைபதைப்பு. யாருக்கும் நிம்மதியான வாழ்க்கை இல்லை. மக்களின் ஒரு பகுதியினர் கருப்பு நாள் என்கிறார்கள். ஒரு பகுதியினர் கொண்டாடுகிறார்கள். எதனால் இந்த வேதனை? 1992 ஆம் ஆண்டு. மதில் ஏறிக்குதித்து, மண்வெட்டி கொண்டு, மசூதியை பெயர்த்தெடுத்த மதவெறிப் பிடித்த மாக்கள் சொன்னது ராமர் பிறந்த இடம் இதுவென்று. கொதித்தெழுந்த மற்ற ஒரு மதவெறி கூட்டம் கோடாலி கொண்டு கூட்டத்தைத் தாக்கி தன் மதப்பற்றை காட்டிக் கொண்டது. வாழ்ந்தாரா இல்லையா என்றுகூட வரலாறு இல்லாத ஒரு கற்பனை கதை நாயகனுக்கும், நாட்டை ஆண்டு நலிந்து இறந்த ஒரு அரசனின் கல்லறைக்கும் இடையே மாட்டி உயிரோடிருந்த பல பிணங்கள் ஒன்றும் அறியாத அப்பாவிகளை கடித்து குதறின.

அதோடு முடிந்ததா? ஆண்டுதோறும் அந்த அச்சம் தொடர்கிறது. மதவெறி கொண்ட மனிதப் பதர்களே... என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.

* மனிதனை விட மதம் எப்படி உங்களுக்கு பெரிதானது?

* மனிதனைக் கொன்று நாட்டினை சுடுகாடாக்கி பேய்களுக்கும், பிசாசுகளுக்குமா மதம் வளர்க்கிறீர்கள்?

* மதம் வளர்க்க மனிதனைக் கொல்லலாம் என்று எந்த மதம் சொல்கிறது?

* எனக்காக கோயில் கட்டுங்கள் என்று எந்த கடவுள் கேட்கிறான்?

* அயல் மதத்தை அழித்து தம் மதத்தை வளர்க்க எந்த கடவுள் ஆணையிட்டான்?

* மத நல்லிணக்கனம் என்ற ஒரு வார்த்தை உண்டே! அதன் அர்த்தம் தெரியுமா உங்களுக்கு?

சனி, 5 டிசம்பர், 2009

நமது ஊரில் உலக வெப்பமாதல் குறித்த விழிப்புணர்வு பேரணி!


நாள் : இன்று (05.12.2009)
நேரம் : மாலை 3 மணி
தொடங்கும் இடம் : தே.கோ.ம.மேல்நிலைப்பள்ளி

அனைவரும் வருக!