ஞாயிறு, 10 ஜனவரி, 2010

காவல்துறை உதவி ஆய்வாளர் வெற்றிவேல் படுகொலை - சில சந்தேகங்கள்!

கடந்த 7 ஆம் தேதி வெற்றிவேலின் படுகொலையை பார்த்தவர்கள் பதறி போயிருப்பார்கள். இந்த நாட்டில் மனிதம் உயிரோடிருக்கிறதா? இல்லை மனசாட்சியை மனிதன் அடகு வைத்துவிட்டதுபோல் அதுவும் மரித்துபோய் விட்டதா என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ளும் சூழ்நிலைக்கு நம்மை ஆளாக்கிவிட்டு வெற்றிவேலின் உயிர் விடைபெற்றுக்கொண்டது.

நடந்தது இதுதான்...

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஆழ்வார்குறிச்சி காவல்துறை உதவி ஆய்வாளர் வெற்றிவேல் அவர்கள் கடந்த 7 ஆம் தேதி தன்னுடைய இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிந்துகொண்டு அம்பாசமுத்திரத்தில் இருந்து வந்துகொண்டிருக்கும்போது ஒரு மர்மக் கும்பல் அவர்மீது வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. அவர் தடுமாறி விழும்போது, அவரை சராமாரியாக வெட்டிவிட்டு அந்த கும்பல் தப்பித்து ஓடிவிட்டது. அவர் துடிதுடித்துக் கொண்டிருக்கும்போது ஒருசில நிமிடங்களில் அந்த வழியே தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் திரு எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்களும், விளையாட்டுத்துறை அமைச்சர் திரு டி.பீ.கே.மைதீன்கான் அவர்களும் இலவச வேட்டி,சேலை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்துள்ளனர். அவர்களுடன் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஜெயராமன் அவர்களும் இருந்துள்ளார்.

வந்தவர்கள் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் வெற்றிவேல் அவர்களை பார்த்துவிட்டு தமிழக அரசின் இலவச ஆம்புலன்ஸ் துறையான 108 க்கு தகவல் தெரிவித்துவிட்டு வாகனம் வரும்வரை காத்திருந்துள்ளனர். அமைச்சச்சர்களுடன் வந்த அவர்களின் பாதுகாவலர்களில் ஒரு சிலர் அந்த கும்பலை துரத்தி சென்று வழக்கம்போல் பிடிக்க முடியாமல் திரும்பியுள்ளனர். இவ்வாறு அமைச்சர்கள் ஏறக்குறைய 20 நிமிடம் வரை காத்திருந்ததாக கூறப்படுகிறது. அப்போதும் ஆம்புலன்ஸ் வர நேரமானதால் வேறுவழியின்றி தங்களுடைய பாதுகாப்பு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர். ஆனால் நேரம் கழித்து கொண்டுசெல்லப்பட்டதால் வெற்றிவேல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த துயர நிகழ்ச்சி முழுதும் நிருபர்களால் படம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் வெற்றிவேலுக்கு தண்ணீர் கொடுக்க செல்லும் ஒருவர், வெற்றிவேல் கைநீட்டி வாங்கும்போது அவர் உடம்பில் உள்ள இரத்தம் தன் சட்டையின் மீது படாமல் இருக்க விலகிசெல்வது வீடியோவில் தெளிவாக தெரிகிறது.

அமைச்சர்கள் மற்றும் ஆட்சியரின் இந்த காலதாமதத்திற்கு எதிர்கட்சிகளும் மற்றும் சில சமூக அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த செய்திகளை கேள்விபட்டவர்கள் அனைவரும் கலங்கித்தான் போயிருப்பார்கள். இதற்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்திருக்கிறார்.

நெல்லை மாவட்ட ஆட்சியர் விளக்கம்

கடந்த 7 ந் தேதி அமைச்சர்களுடன் ஆய்வு பணிக்கு சென்றிருந்த போது மதியம் 2.40 மணிக்கு இந்த துயர சம்பவம் நடந்தது. சம்பவம் நடந்த இடத்திற்கு சில நிமிடத்தில் வந்த அமைச்சர்களும், நானும் காரில் இருந்து இறங்கிவிட்டோம்.

ஒரே புகைமண்டலமாக இருந்தது. ஒரு நிமிடம் எங்களுக்கு எதுவுமே ஓடவில்லை. இந்த சம்பவத்தின் போது பொது மக்கள் யாரும் அங்கு இல்லை. நாங்கள் 6 பேர் மட்டுமே நின்றோம். சம்பவ இடத்தில் குண்டுகளும், புகை மண்டலமும் இருந்ததால் 2,3 நிமிடங்கள் என்ன நடந்தது என அறியாமல் திகைத்தோம். சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை நான் பார்த்தேன். எங்களுடன் 6 வாகனங்கள் வந்திருந்தன. பாதுகாப்புக்கு வந்த போலீசார் ஒரு வாகனத்துடன் கொலையாளிகளை பிடிக்க சென்றனர்.

அந்த கும்பல் போலீசாரை நோக்கி நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். பாதுகாப்பு போலீசார் குற்றவாளிகளை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டனர். இந்த வேளையில் வாகனத்தில் இருந்து இறங்கிய நாங்கள் அங்கு சப் இன்ஸ்பெக்டர் விழுந்து கிடப்பதை பார்த்து அருகில் சென்றோம். எங்கள் கால் அருகே வெடிக்காத குண்டு கிடந்தது. பாதுகாப்பு அதிகாரிகள் இதை எங்களிடம் கூறினர். உடன் வந்த அமைச்சர்கள் உயிரையும் கவனத்தில் கொண்டு மிகுந்த எச்சரிக்கையுடன் அடுத்த நடவடிக்கையில் ஈடுபட்டோம்.

வெற்றிவேலின் உடலின் இருந்து வெளியேறிய ரத்தத்தை கட்டுப்படுத்த அமைச்சருக்கும், எனக்கும் ஒரு நிகழ்ச்சியில் போர்த்தப்பட்ட சால்வையை எடுத்து கட்ட சொன்னோம். உடனே 108 ஆம்புலன்சுக்கு நான் தகவல் கொடுத்தேன். ஒரு ஆம்புலன்ஸ் தென்காசியிலும், மற்றொன்று சேர்மாதேவியிலும் நின்றதால் அது வர தாமதமாகும் என எண்ணி எங்களுடன் வந்த மற்றொரு பாதுகாப்பு வாகனத்தில் சப் இன்ஸ்பெக்டர் வெற்றிவேலை ஏற்றினோம்.

அமைச்சரின் உதவியாளர், எனது டபேதார், சுகாதாரத்துறை டாக்டர் சுப்பிரமணியன் ஆகியோர் வெற்றிவேலுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தவாரே பாதுகாப்பு வாகனத்துடன் சென்றனர். உடனே நான் அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு போன் செய்து டாக்டர் மற்றும் நர்சுகளை தயார் நிலையில் இருக்க கூறினேன். அம்பையில் முதலுதவி சிகிச்சைக்கு பின் பாளை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோதும் இதுபோன்று துரித நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஒரு வினாடி கூட தாமதிக்காமல் அடுத்தடுத்து இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. துரிதமாக செயல்பட்டு வெற்றிவேலை காப்பாற்ற தீவிரமாக போராடினோம். இதில் காலதாமதம் எதுவும் செய்யவில்லை. கொலை செய்யப்பட்ட சப் இன்ஸ்பெக்டர் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை அரசு மூலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுத்துள்ளார். என்று ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

இதில் எந்த அளவுக்கு உண்மை என்று அங்கிருந்தவர்களுக்கு மட்டுமே தெரியும். நாம் அதைபற்றி பேச விரும்பவில்லை. எங்களுக்கு இந்த சம்பவத்தில் சில சந்தேகங்கள் உண்டு. அதற்கு யாராவது விளக்கம் அளிப்பீர்களா?

சந்தேகங்கள்:

1. ஒருவரை கொலை செய்ய திட்டமிடும் இதுபோன்ற சமூகவிரோதிகளுக்கு அந்த இடத்தில் உடனேயே அமைச்சர்கள் வருவார்கள் என்று தெரியாமல் இருக்காது. இருந்தும் எப்படி இப்படி துணிச்சலாக செய்தார்கள்? இதற்கு பின்னணி என்ன?

2. கடையம் பகுதி காவல்துறை உதவி ஆய்வாளர் சிவசுப்ரமணியம் குடும்ப பிரச்சனை காரணமாக, அவரை கொலை செய்ய நினைத்த கும்பல், தலைக்கவசம் அணிந்திருந்ததால் அடையாளம் தெரியாமல் வெற்றிவேலை கொன்றுவிட்டதாக சொல்கிறார்கள். குடும்ப பிரச்சனை காரணமாக கொலை செய்ய வருபவர்களுக்கு தங்கள் குடும்பத்தை சேர்ந்தவரை எப்படி அடையாளம் தெரியாமல் போகும்? தலைக்கவசம் போட்டிருந்தாலும் வண்டி எண் கூடவா தெரியாது?

3. வெற்றிவேல் அவர்களுக்கு தன் பணி நிமிர்த்தமாக எதிரிகள் யாரும் இருக்கிறார்களா என்ற கோணத்தில் விசாரிக்கப்படாமலேயே தனிப்பட்ட நபர்களின் குடும்ப பிரச்சனை என்று உடனேயே சொல்ல வேண்டிய அவசியம் என்ன?

4. கடையம் காவல்துறை உதவி ஆய்வாளர் சிவசுப்பிரமணியம் இதுவரையில் எந்தவொரு செய்தியும் தரவில்லேயே? அவரைப் பற்றிய செய்திகள் யாரேனும் வைத்திருந்தால் நாங்கள் தெரிந்து கொள்ளலாமா?

5. காவல்துறையை சேர்ந்தவர்களை அமைச்சர்கள், அதிகாரிகள் முன்னாலேயே கொலைசெய்துவிட்டு தப்பித்து ஓடமுடியும் என்றால் சாதாரண குடிமகன்களின் நிலை என்ன?

6. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியாக இருக்கிறது என்று அடிக்கடி சொல்கிறார்களே! அப்படி என்றால் என்ன அர்த்தம்?

7. தமிழக அரசின் இலவச ஆம்புலன்ஸ் துறை 108 பற்றி அடிக்கடி கலைஞர் தொலைக்காட்சியில் விளம்பரம் வருகிறது. அதற்காக ஒரு உயிர் துடிக்கும்போது நாம் அருகில் நின்றாலும் ஆம்புலன்ஸ்தான் வரவேண்டும் என்ற சட்டம் வகுத்து காத்திருப்பது நியாயமா?

8. மனிதாபிமானத்தோடு உதவி செய்ய வரும் குடிமகன்கள் அதன்பின், இந்த பிரச்சனையில் அடிக்கடி நீதிமன்றத்திற்கு இழுப்பதால்தான் உதவ நினைக்கும் எண்ணம் கொண்டவர்கள் கூட மனதை கல்லாக்கி கொள்கிறார்கள். இந்த சட்டம் எப்போது மாறப்போகிறது?

3 comments:

அஹோரி சொன்னது…

கொடுமையான நிகழ்வு. அந்த அமைச்சர்களுக்கு சோறு உள்ள இறங்குமா ?
உயிரை , உடமையை பற்றி கவலை படாமல் மக்களுக்கு நல்லது செய்யதான் இவனுங்க அரசியலுக்கு வரதா சொல்லறானுங்க. போலீஸ் காரருக்கே இந்த கதின்னா , என்னத்த சொல்ல.

பெயரில்லா சொன்னது…

இதில் நடந்தது ஒரு அரசியல் விளையாட்டு...

மதார் சொன்னது…

//1. ஒருவரை கொலை செய்ய திட்டமிடும் இதுபோன்ற சமூகவிரோதிகளுக்கு அந்த இடத்தில் உடனேயே அமைச்சர்கள் வருவார்கள் என்று தெரியாமல் இருக்காது. இருந்தும் எப்படி இப்படி துணிச்சலாக செய்தார்கள்? இதற்கு பின்னணி என்ன?

2.
கடையம் பகுதி காவல்துறை உதவி ஆய்வாளர் சிவசுப்ரமணியம் குடும்ப பிரச்சனை
காரணமாக, அவரை கொலை செய்ய நினைத்த கும்பல், தலைக்கவசம் அணிந்திருந்ததால்
அடையாளம் தெரியாமல் வெற்றிவேலை கொன்றுவிட்டதாக சொல்கிறார்கள். குடும்ப
பிரச்சனை காரணமாக கொலை செய்ய வருபவர்களுக்கு தங்கள் குடும்பத்தை
சேர்ந்தவரை எப்படி அடையாளம் தெரியாமல் போகும்? தலைக்கவசம்
போட்டிருந்தாலும் வண்டி எண் கூடவா தெரியாது?//

இதே சந்தேகம் எனக்கும் வந்தது . அமைச்சரின் பாதையை சரிசெய்ய போகும்போது தனியாகவா செல்வார்? அதுவும் பைக்கில்.காவல்துறை வாகனம் எங்கே ? இன்னும் ............