செவ்வாய், 12 ஜனவரி, 2010

கலைஞர் காப்பீடு திட்டம் - சில சந்தேகங்கள்...

தற்போது தமிழகத்தில் கலைஞர் காப்பீடு திட்டம் என்ற பெயரில் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் காப்பீடு வழங்கிக் கொண்டிருக்கிறது தமிழக அரசு. இதன்படி குடும்ப உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டால் போதும். இந்த திட்டம் பற்றிய விதிகள் என்னவென்றால்...

*** உறுப்பினர்கள் அனைவருக்கும் சேர்த்து தமிழக அரசே காப்பீடு பணத்தை செலுத்திவிடும்.

*** இந்த காப்பீடு நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லும்.

*** குடும்பத்தின் மாத வருமானம் ஆறாயிரம் ரூபாயை தாண்டக் கூடாது.

*** குடும்ப உறுப்பினர்களில் யாரும் அரசு வேலையில் இருக்கக் கூடாது. (இப்போது இந்த விதி தளர்த்தப் பட்டுள்ளது என்று நினைக்கிறேன்)

*** இந்த நான்கு ஆண்டுகளில் உறுப்பினர்களில் யாருக்காவது உடல்நலம் குன்றினால் தமிழக அரசு வெளியிட்டுள்ள குறிப்பிட்ட சில தனியார் மருத்துவமனைகளில் இந்த காப்பீடு திட்டத்தை பின்பற்றி ஒரு லட்சம் ரூபாய் வரை இலவசமாக மருத்துவமோ, அறுவை சிகிச்சையோ செய்து கொள்ளலாம். (அந்த குறிப்பிட்ட மருத்துவமனைகள் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு ஆனதாக கணக்கு காட்டி மீதி பணத்தை நம்மை கட்ட சொன்னால் கட்டத்தான் வேண்டும். வேறு வழியில்லை)

இந்த திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற தமிழக அரசு இந்த மருத்துவமனைகளுக்கு இதுவரையில் சுமார் 4000 கோடிகள் வரை காப்பீடு தொகை கட்டியுள்ளதாக கணக்கு காட்டியுள்ளது. இப்போது வேறு நேற்று (11.01.2010) புதியதாக 317 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இவைகள்தான் இந்த திட்டத்தின் விதிமுறைகள். மேலோட்டமாக பார்ப்பதற்கு நல்ல திட்டமாக தோன்றும் இந்த திட்டத்தில் பல பெரிய, பெரிய ஓட்டைகள் இருப்பதை யாராலும் மறுக்கமுடியாது. முதலில் இந்த காப்பீடு என்பது நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே பொருந்தும். நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் காப்பீடு செய்யவேண்டுமானால் அப்போதைய நிலவரப்படி அரசு இந்த தனியார் மருத்துவமனைகளுக்கு கோடிகளை கொட்டிகொடுக்க வேண்டும். அடுத்து, இந்த காப்பீடை பயன்படுத்த குடும்ப மாத வருமானமாக 6000 ரூபாயை உச்ச வரம்பாக நிர்ணயித்துள்ளது அரசு. இப்போதுள்ள நிலையில் 6000 ரூபாயை வைத்துக்கொண்டு ஒரு குடும்பத்தை நடத்த முடியும் என்றால், அதுதான் இந்த ஆட்சியின் உண்மையான சாதனையாக இருந்திருக்கும். ஆனால் நடக்கும் காரியமா இது? ஆகவே அனைவரும் பொய் சொல்லியே ஆகவேண்டும்.

இனி எனக்கிருக்கும் சந்தேகங்கள்...

சந்தேகம் 1:
இவ்வளவு கோடி கொட்டி கொடுத்து, தனியார் மருத்துவமனைகளில் எதற்கு இந்த திட்டத்தை தொடங்க வேண்டும். அப்படியென்றால் அரசு மருத்துவமனைகள் அனைத்தும் தரமற்றவை என்று அரசே ஒத்துக்கொள்கிறதா?

சந்தேகம் 2:
ஆயிரக்கணக்கான கோடியை இந்த திட்டத்தில் செலவிடும் அரசு, அந்த பணத்தை வைத்து அனைத்து அரசு மருத்துவமனைகளையும் நவீனப்படுத்தினால் தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் இலவசமாகவே மருத்துவம் அளித்திருக்கலாமே. இதில் ஏன் ஒரு சில பிரிவினரை ஒதுக்கவேண்டும்? இவ்வாறு செய்திருந்தால் இப்போது செய்திருக்கும் செலவைவிட நிச்சயமாய் குறைவாகத்தான் செலவாகியிருக்கும் என்பது என் எண்ணம்.

சந்தேகம் 3:
கலைஞர் காப்பீடு திட்டம் என்ற இந்த திட்டத்திற்கு புகைப்படம் எடுப்பதற்கு இதுவரை எவ்வளவு செலவானது என்று இதுவரையில் காட்டப்படவில்லையே. மேலும், காப்பீடு திட்டத்திற்கு புகைப்படம் எடுப்பவர்களில் யாரும் மருத்துவம் தெரிந்தவராக இல்லையே. அனுபவம் இல்லாத சிலரை அனுப்பி புகைப்படம் எடுக்க சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனம் எப்படி ஒத்துக்கொண்டது? காப்பீடு என்று யார் வந்தாலும், நிச்சயமாய் ஒரு இலட்சத்துக்கு மேல் வாங்கிவிடலாம் என்ற நம்பிக்கையா?

சந்தேகம் 4:
கலைஞர் காப்பீடு திட்டத்தில் அறுவை சிகிச்சைக்கு ஆகும் செலவில் ஒரு இலட்சம் வரைதான் இலவசம். மற்றபடி, மருந்துக்கு ஆகும் செலவு, தொடக்கத்தில் செய்யப்படும் டெஸ்டுகள், அறுவை சிகிச்சைக்கு ஆகும் மீதம் உள்ள தொகை, அறுவை சிகிச்சைக்கு பிறகு தங்கும் செலவு அனைத்தையும் சம்மந்தப்பட்ட மருத்துவமனைக்கு நாம் செலுத்தியே ஆகவேண்டும். இப்போது காப்பீடு பெறலாம் என்று தெரிவித்திருக்கும் இந்த பெரிய தனியார் மருத்துவமனைகளில் இதற்கெல்லாம் எவ்வளவு செலவு ஆகும் என்று நமக்கு தெரியும். மாதம் 6000 சம்பளம் வாங்கும் ஒரு சாதாரண குடும்பத்தில் இதெல்லாம் சாத்தியமா? எதற்காக இந்த திட்டத்தில் இவ்வளவு பெரிய ஓட்டை.

சந்தேகம் 5:
காப்பீடு எடுத்திருக்கும் நபர் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்ந்து, அரசு வழங்கும் பணம் தவிர வேறு பல செலவுகள் செய்தும் குறிப்பிட்ட 4 ஆண்டுகளுக்குள் இறந்துவிட்டால், அவருக்கு இழப்பீட்டு தொகை பற்றி எதுவும் அறிவிக்கப்படவில்லையே. அந்த ஒரு இலட்சம் மட்டுந்தான் பயன்படுத்தமுடியும் என்றால், தனியார் மருத்துவமனைகள் ஆடித்தள்ளுபடி போல் ஒரு இலட்சம் ஆகும் அறுவை சிகிச்சையை இரண்டு இலட்சம் என்று சொல்லி நம்மிடமும் ஒரு இலட்சம் வசூலிக்காது என்பது என்ன நிச்சயம். ஆகவே உறுப்பினர் இறந்துவிட்டால், சம்மந்தப்பட்ட தனியார் மருத்துவமனைகள் உரிய பொறுப்பேற்க வேண்டும் என்று அவர்களுக்கு ஏன் எந்த விதிமுறையும் வகுக்கப்படவில்லை?

சந்தேகம் 6:
மொத்தமாக இவ்வளவு கோடி பணம் செலுத்தப்பட்டது என்று மட்டும் செய்தி வருகிறது. தனிப்பட்ட நபரின் காப்பீட்டிற்காக 4 ஆண்டுகளுக்கு எவ்வளவு தொகை செலுத்தப்படுகிறது என்று எதுவும் சொல்லவில்லையே. ஏன்?

சந்தேகம் 7:
அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் என யாருமே சரியாக வருவதில்லை என்ற ஒரு புகார் நெடுநாட்களாக இருந்து வருகிறது. இப்போதுகூட மதுரை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக இரவில் வந்த எயிட்ஸ் பாதித்த ஒரு கர்ப்பிணி பெண் மருத்துவர் மற்றும் செவிலியர் யாருமே இல்லாததால் தனக்குத்தானே பிரசவம் பார்த்த கொடுமை நடந்தது. பிராண வாயு இல்லாமல் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் திருச்சி அரசு மருத்துவமனையில் ஏறக்குறைய 800 குழந்தைகள் பிறந்தவுடனே இறந்துவிட்டன என்று ஜூனியர் விகடன் சுட்டிகாட்டியது. இதற்கெல்லாம் சரியான தீர்வு கண்டுபிடிக்காமல் காப்பீடு திட்டம் பற்றி மட்டும் தொலைகாட்சியில் விளம்பரம் மேல் விளம்பரம் செய்துகொள்வது என்பது வீட்டின் கூரை சிறிது பிய்ந்து போய் விட்டதா? பரவாயில்லை பக்கத்திலேயே சிறிய கூடாரம் அடித்துக்கொள்ளுங்கள் என்பது போன்றது. கூரையை சரிசெய்வதைவிட கூடாரம் அடிப்பது செலவு அதிகம் என்பது தெரிந்தும். வீட்டை மூடிவிட்டு எவ்வளவு நாள் கூடாரத்தில் குடியிருக்க முடியும். கனமழை வந்தால் தாங்குமா என்ற தொலைநோக்கு பார்வையோடு இந்த திட்டத்தில் சிறு சிறு மாற்றங்கள் செய்தால் நல்லது.

(இந்த திட்டத்தை பற்றிய உங்கள் சந்தேகங்களையும், என் சந்தேகத்திற்கு உரிய பதில் உங்களுக்கு தெரிந்திருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.)

2 comments:

பெயரில்லா சொன்னது…

ஐயா .. நல்ல ஆராய்க ....... அந்த நிறுவனத தொடனகனவரு , யாருன்னு ஆராய்ங்க ... அங்க இருக்கு மர்மம் ..
மக்களின் வரிப்பணம் முற்றிலும் வேஸ்ட் .
இதற்க்கு பதில் , ஒரு மாவட்டத்திற்கு ஒரு சுப்பர் specality Hospital ( கிட்ட தட்ட அப்போல மாத்ரி hospital கட்ட 100 கோடி தான் செலவாகும் .)கட்டலாம் .

அஹோரி சொன்னது…

நல்ல கேளுங்க. ஒருத்தன் வாய திறக்க மாட்டான்.