வெள்ளி, 26 மார்ச், 2010

பென்னாகரம்: தலைவர்களின் சிறப்பு பேச்சுகள்


பென்னாகரத்தில் நாளை நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்காக தலைவர்களின் பிரச்சாரங்கள் நடைபெற்றது. அதன் தொகுப்புகள் கீழேத் தரப்பட்டுள்ளன. தலைவர்களின் பேச்சுகள் உங்களுக்கு நகைச்சுவையாகவோ, உண்மையாகவோ, சிந்திக்கும்படியோ, வருந்தும்படியோ அல்லது வேறு எந்த உணர்ச்சிகள் தோன்றினாலும் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல! பொறுப்பல்ல!! பொறுப்பல்ல!!! (யாரது சும்மா நிக்கறது! மணி ஆட்டுங்கப்பா!)


சரித்திர புகழ் வாய்ந்த சட்டப்பேரவை காண வாக்களியுங்கள் - முதல்வர் கருணாநிதி

பென்னாகரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் கூட்டணியின் கழக வேட்பாளர் இன்பசேகரனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற வையுங்கள் என்று உங்களிடம் வாக்கு கேட்டு வரவில்லை. நான் வந்த நோக்கம் வேறு. திமுக ஆட்சியின் சாதனையான சரித்திர புகழ் வாய்ந்த சட்டப்பேரவை மண்டபத்தை பார்க்க சென்னைக்கு வாருங்கள் என அழைப்பு விடுக்கவே வந்துள்ளேன். நாங்கள் அனைவரும் வந்து பார்க்க இடம் இருக்கிறதா என கேட்பீர்கள். அதற்கு உங்களின் சார்பில் ஒருவரை அனுப்பி வையுங்கள். அவர் யார் என்றால் இன்பசேகரனை தேர்ந்தெடுத்து அனுப்பு வையுங்கள். அவர் நேரில் பார்த்துவிட்டு சட்டமன்ற கட்டிடத்தின் அருமை, பெருமைகளை உங்களிடம் கூறுவார். எனவே சட்டமன்ற கட்டிடத்தை பார்க்க அழைப்பு விடுக்கவே வந்துள்ளேன். ஓட்டு கேட்டு வரவில்லை என்றால் அவ்வளவு அலட்சியமா? அகம்பாவமா என நீங்கள் எண்ணக்கூடாது. உங்கள் மீதுள்ள உரிமையில் அழைப்பு விடுக்க வந்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளேன்.

சட்டமன்ற திறப்பு விழாவிற்கு முறைப்படி அழைப்பு அனுப்பவில்லை. அதனால் வரவில்லை என அம்மையார் ஜெயலலிதா கூறியுள்ளார். முறைப்படிதான அனைவருக்கும் அழைப்பு விடுத்தோம். திமுக ஆட்சி காலத்தில், அனைத்து கட்சிக் கூட்டங்களுக்கும் எல்லோருக்கும் அழைப்பு அனுப்புவது வழக்கம். அந்த அழைப்பை அலட்சியம் செய்து, கேலி செய்து அவமானப்படுத்தும் கட்சி அதிமுகதான். தமிழகத்திற்காக, தமிழர்களுக்காக, தமிழ் மொழிக்காக இந்த அவமானத்தை தாங்கிக் கொள்வோம். நான் ஜெயலலிதாவை குறிப்பிடும்போது, அம்மையார் ஜெயலலிதா என்றே குறிப்பிடுவேன். ஆனால், அவர் கருணாநிதி என்றே குறிப்பிடுவார். நாம் மதித்தால்தான், நம்மை மற்றவர்கள் மதிப்பார்கள்.

இந்த தேர்தலில் திமுக, அதிமுக, பாமக கட்சிகளில் யாருக்கு செல்வாக்கு என்று கருத்து கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திமுக முதல் இடத்தையும், பாமக 2வது இடத்தையும், அதிமுக 3வது இடத்தையும் பெற்றுள்ளன. மூன்றாவது இடத்தை பெற்ற எதிர்கட்சியான அதிமுகவை நினைத்து வருத்தப்படுகிறேன். அனுதாபப்படுகிறேன். இதே நிலை சென்றால் அடுத்த தேர்தலில் டெபாசிட் கூட அவர்களால் வாங்க முடியாது.

பென்னாகரம் பொன்னகரமாக மாற வாக்களியுங்கள் - அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா
காவிரி ஆறு முதலில் கால்பதிக்கும் தொகுதியான பென்னாகரத்தில் வறட்சி தாண்டவமாடுகிறது. 5 ஆண்டுகளுக்கு முன்பு கூட கரும்பு, நெல் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டன. ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக இங்கு கடும் வறட்சி நிலவுகிறது.
திமுக
திமுக
ஆட்சியில் நிர்வாகமும் சரியில்லை. சட்டம் ஒழுங்கும் சரியில்லை. அனைத்துப் பொருட்களின் விலையும் பலமடங்கு உயர்ந்துள்ளது. கடுமையான மின்வெட்டு உள்ளது. இதன் விளைவாக விவசாயம் செய்யமுடியாத அவலநிலை உள்ளது. கரும்புக்கும், நெல்லுக்கும் நியாயமான விலை தரப்படவேண்டும். வேலையில்லாத் திண்டாட்டம் நீடிப்பதால், இத்தொகுதி மக்கள் பிற மாநிலங்களுக்கும், மாவட்டங்களுக்கும் வேலை தேடிச்செல்லும் அவலநிலை உள்ளது.

மணல் கொள்ளை, அரிசி கடத்தல் நடக்கிறது. கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் தமிழகத்தைப் பிரித்து, வளத்தை சுரண்டுகிறார்கள். சுருட்டிய பணத்திலும், ஊழலில் சம்பாதித்த பணத்தாலும் வாக்காளர்களை விலைக்கு வாங்க முயல்கின்றனர். உங்களது பணத்தை உங்களிடம் தருகிறார்கள். அதை வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால் வாக்குகளை அ.தி.மு.க.வுக்கு செலுத்துங்கள்.

பா.ம.க. தலைவர் இங்கு 2 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். ஆனால் தொகுதி மக்களுக்கு ஏதும் செய்யவில்லை. அவரது மகனும் தந்தை வழியில் நடப்பார். இத்தொகுதிக்கு ஏதும் செய்யமாட்டார். அ.தி.மு.க. ஆட்சியில் பென்னாகரத்தில் பல தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்பட்டன. பல தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன.

அ.தி.மு.க. மீண்டும் வெற்றிபெற்றால் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றுவேன். தொகுதி மக்களுக்கு குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுப்பேன். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க தொழிற்சாலைகள் தொடங்கப்படும். ஒகேனக்கல்லில் கூட்டுறவு மீன் விற்பனை மையம் அமைக்கப்படும். பென்னாகரம் பேருந்து நிலையம் தரம் உயர்த்தப்படும். கிராமங்கள்தோறும் கழிப்பிட வசதிகள் செய்து தரப்படும்.

தி.மு.க. ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் உரிமை வாக்காளர்களிடம் உள்ளது. இடைத்தேர்தலை வாய்ப்பாக பயன்படுத்தி, அதிமுகவை வெற்றிபெறச் செய்யுங்கள். பென்னாகரம் பொன்விளையும் நகரமாக மாறும்.

தி.மு.க.வை ஒழிப்பதுதான் என் முதல் வேலை - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்
பென்னாகரம் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த பெரியண்ணன், இத்தொகுதி மக்களுக்கு என்ன செய்துள்ளார். பெரியண்ணன் நல்லது செய்தார் என யாராவது கூற முடியுமா? ‘ஐந்து ஆண்டு முதல்வராக இருந்தும், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. அதற்கு நான் மன்னிப்பு கேட்கிறேன் என்று பிரச்சாரத்துக்கு வந்த முதல்வர் கூறியிருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, “நான் உங்கள் ஓட்டு கேட்டு வரவில்லை. புதிய சட்டசபை கட்டடத்தை வந்து பாருங்கள்; நீங்கள் வரவில்லையென்றால், இன்பசேகரனையாவது அனுப்பி வையுங்கள் எனக் கூறியுள்ளார். இன்னும் 50 ஆண்டுகளுக்கு நல்லமுறையில் இருக்கும் தலைமைச் செயலகத்தை விட்டு, அவசர கதியில் புதிய சட்டசபைக் கட்டடத்தை கட்டி வைத்துள்ளார். சாதனையைச் சொல்லி ஓட்டு கேட்க முடியவில்லை. அதைப் பற்றி தான் சொல்வதற்கில்லையே.

பா.ம.க. ஆட்டம் கண்டுவிட்டது. அமைதியாகி விட்டது என புறம்போக்குகள் சிலர் கூறுகின்றனர். இப்போது சொல்கிறேன். திமுகவை அழிப்பதுதான் என் முதல் வேலை. ஐந்து முறை முதல்வராக இருந்த கருணாநிதி, இத்தொகுதி மக்களை பிச்சை எடுத்து வைத்துள்ளார். சாதனையைச் சொல்லி ஓட்டு கேட்காமல், சாராயத்தையும், பணத்தையும், மூக்குத்தியையும் கொடுத்து ஓட்டு கேட்கின்றனர். எல்லா மக்களையும் குடிகாரர்களாக (குவார்ட்டர் பாட்டிலை கையில் வைத்தபடி) ஆக்கிவிட்டனர். தமிழ்நாடு குடிகார நாடாக மாறிவிட்டது. கருணாநிதியை யாரும் மன்னிக்க மாட்டார்கள். மன்னிக்கவும் கூடாது. சட்டசபையில் இருக்கும் 50 எம்.எல்.ஏக்கள், ஆறு அமைச்சர்கள், பா.ம.க. தொண்டர்களின் உழைப்பால் வெற்றி பெற்றனர். இப்போது கூறுகிறேன். திமுகவுக்கு மூன்றாவது இடம்தான் கிடைக்கும். தண்ணீர் கொடுக்காத தி.மு.க.வுக்கு பென்னாகரம் வாக்காளர்கள் தண்ணீர் காட்ட வேண்டும். அக்கட்சிக்கு ஓட்டு போட்டால், அராஜகம்தான் தலை தூக்கும்.

பணமா? இனமா? ஜனமா? - தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்
தமிழ்நாட்டில் நான் அதிகம் சினிமா படப்பிடிப்பிற்காக வந்துசென்ற இடங்களில் ஒகேனக்கலும் ஒன்று. அதனால் இந்தப் பகுதி எனக்கு நன்கு பரிச்சயமான பகுதி. இந்தப் பகுதியில் உள்ள பரிசல் ஓட்டிகள் என்மீது பாசம் வைத்து களியும், மீன் குழம்பும் செய்து கொண்டுவந்து தருவார்கள்.

இப்போதும் அந்த பரிசல் ஓட்டிகள் என்மீது அதே பாசத்துடன் இருக்கிறார்கள். ஆனால் அவர்களிடம் களியும் மீன் குழம்பும் கேட்க முடியுமா என்று தெரியவில்லை. ஏனென்றால் தமிழ்நாட்டில் அந்த அளவுக்கு விலைவாசி விஷம்போல உயர்ந்துகொண்டே இருக்கிறது.

இந்தத் தொகுதியில் காங்கிரஸ், திமுக, பாமக என மாறி மாறி ஜெயித்தார்கள். ஆனால் தொகுதி வளர்ச்சிக்காக எந்த ஒரு பணியையாவது அவர்கள் செய்தார்களா என்று கேட்டால் இல்லை என்றுதான் கூறமுடியும்.

இப்போது இந்த தேர்தலுக்காக அவர்கள் எல்லோரும் உங்களிடம் ஓடோடி வந்து உங்களுக்கு குடிக்க தண்ணீர் தருவேன், சாலை வசதி செய்து தருவேன், அடிப்படை வசதி செய்து தருவேன் என்று கூறி உங்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள். முன்பு ஜெயித்திருந்தபோதே அதை எல்லாம் செய்து கொடுத்திருக்க வேண்டியதுதானே.

இன்று உங்களைத் தேடி வந்து ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் தருகிறார்கள். சாதனையை செய்தவர்கள் எதற்காக பணம் கொடுத்து ஓட்டுகை வாங்க வேண்டும். இந்த தேர்தலில் பணத்தை நம்பி இரண்டு கட்சிகளும், இனத்தை நம்பி ஒரு கட்சியும் போட்டியிடுகின்றன. நான் ஒருவன்தான் ஜனத்தை (மக்களை) நம்பி இந்த தேர்தலில் நிற்கிறேன்.

அரசியலை விட்டு விலகத்தயார் - துணை முதல்வர்

நாங்கள் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் உங்களோடு, உங்களுக்காகவே பாடுபட்டு வருகிறோம். சிலர் தேர்தல் நேரத்தில் மட்டும் உங்களை தேடி வருகின்றனர். தேர்தல் முடிந்தவுடன் ஓய்வெடுக்க கோடநாடு சென்று விடுகின்றனர்.

இன்னும் சிலர் எங்காவது பதவி கிடைக்கும், அதுவும் தேர்தலில் போட்டியிடாமலேயே மத்திய அமைச்சராகிவிட முடியுமா என்று பதவிக்காக அலையும் தலைவர்களாக இருக்கிறார்கள். அதிமுகவோ, திமுகவோ ராஜ்யசபா சீட் தருவதாக கூறினால், இப்போதே தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகிக் கொள்ளவும் தயாராக இருக்கின்றனர்.பென்னாகரம் தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை என்று ஜெயலலிதா அபாண்டமான பொய்களை கூறி வருகிறார். மடம் என்ற பகுதியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் முதல் கட்ட பணிகளை நான் துவக்கி வைத்தேன். உங்களின் குடிநீர் பிரச்சனைக்கு இதன்மூலம் தீர்வு கிடைக்கும். இதனை நிச்சயம் நிறைவேற்றியே தீருவோம்.

இந்தத் திட்டம் தொடங்கப்படவில்லை என்பதை அவர்கள் நிரூபித்தால், நாங்கள் அரசியலை விட்டே விலகி விடுகிறோம். மாறாக, திட்டம் தொடங்கி நடந்து வருவதை நாங்கள் நிரூபித்தால் அவர் அரசியலை விட்டு வெளியேறத் தயாரா?

துரோகம் செய்யும் கருணாநிதிக்கு பாடம் புகட்டுங்கள் - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
பென்னாகரத்தில் நடைபெற உள்ள இந்த இடைத்தேர்தலில் குருஷேத்திர யுத்தக்களம் போன்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தலில் உறுதியாக ஜனநாயகம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. பணத்தை கொடுத்து ஓட்டுக்களை வாங்கிவிடலாம் என்ற நிலை ஏற்பட்டால் ஜனநாயகம் என்பது கேலிக்கூத்தாகிவிடும். அத்தகைய நம்பிக்கைக்கு இளைஞர் சமுதாயம் ஆளாகிவிட்டால் நாடு மிகவும் மோசமான சூழ்நிலையை சந்திக்க வேண்டியது நேரிடும். முல்லைப்பெரியாறு அணை, காவிரி ஆறு, பாலாறு என்று பக்கத்து மாநிலங்கள் தமிழகத்திற்கு துரோகம் செய்வதை கருணாநிதி கண்டிக்காமல் இருக்கிறார். அவருக்கு மத்திய அரசும் துணைபோகிறது. ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு கொடுப்பதாகக்கூறி மக்களை ஏமாற்ற முடியாது. மற்றப் பொருட்களின் விலை விண்ணைத் தொட்டு இருக்கிறது. இந்த விலைவாசி உயர்வால் நடுத்தர குடும்பத்தினர் ஒரு மாதத்திற்கு இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் கூடுதலாக செலவு செய்ய வேண்டிய கட்டாய நிலையில் உள்ளனர். விலைவாசி உயர்வு, முல்லைப்பெரியாறு ஆகிய பிரச்சனைகளால் மீண்டும் மீண்டும் தமிழகத்திற்கு துரோகம் செய்துவரும் கருணாநிதிக்கு இந்த தேர்தல் முடிவு ஒரு பாடமாக அமையும் என்று நம்புகிறேன்.

வன்னியர் இனக் காவலர் கருணாநிதி - விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன்

பென்னாகரம் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் இன்பசேகரன் வெற்றி பெறுவது உறுதி. இது அனைவரும் அறிந்த ஒன்று. ஓட்டு வித்தியாசம் அறிந்து கொள்வதற்காக தான் பொதுக்கூட்டத்தின் மூலம் முதல்வர் உங்களை சந்திக்க வந்திருக்கிறார். திமுக அரசு அளப்பரிய சாதனைகளை செய்துள்ளது. இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அவதூறு, பொய் செய்திகளை சிலர் பரப்பி வருகின்றனர். பொதுக்கூட்டத்தின் மூலம் என்னென்ன சாதனைகள் செய்துள்ளோம் என்று சொல்வதற்காகவே தமிழக முதல்வர் கருணாநிதி வந்துள்ளார். பிற்படுத்தப்பட்ட மக்கள் மேம்பாட்டுக்காகவும், தாழ்த்தப்பட்ட மக்கள் உயர்விற்காகவும் சாதனைகள் செய்துள்ளார். வன்னியர் சமுதாய மக்களுக்கு ஏராளமான சலுகைகளை முதல்வர் வழங்கியுள்ளார். கலைஞர், தமிழின காவலர் என்பதைவிட வன்னியர் இன காவலராக இருக்கிறார் என்றே கூறலாம்.


சாதனைகள் ஒன்றும் இல்லை; எல்லாம் எங்களுக்கு சோதனைகளே! - மாண்புமிகு மக்கள்!

என்ன நடக்குது இங்கே! வராதவங்க எல்லாம் வந்திருக்காங்க.. பேசாத பேச்செல்லாம் பேசறாங்க.. இத்தனநாளா எங்க போயிருந்தாங்கன்னும் புரியலை. நாளைக்கு அப்புறம் இப்படி வருவாங்களான்னும் புரியல. எல்லாத்தையும் கேட்கறப்ப அறுப்புக்கு அழைச்சிட்டுப்போற ஆட்டுக்கு மாலை போட்டு மரியாதை செய்யறமாதிரி நமக்கும் செய்றாங்களோன்னு ஒரு சந்தேகம் இருந்துகிட்டே இருக்கு...



நன்றி: அனைத்து தமிழ் இணையத்தளங்கள்

1 comments:

Subu சொன்னது…

இப்ப லேட்டஸ்டு நிலமை என்னாண்ணே ...அதை சொல்லிபோடுங்க !! ஆவலா காத்துக்கிட்டு இருக்கோமில்ல

மேலும் :

http://manakkan.blogspot.com/2010/03/blog-post_29.html