திங்கள், 5 ஜூலை, 2010

தலைவனும் தொண்டனும்!

அரசியல் அரங்கில் மட்டுமல்லாது அனைத்துத் துறைகளிலும் தனக்குப் பிடித்தவர்களை தலைவராக ஏற்றுக்கொண்டு, தொண்டனாகிவிடும் மனப்போக்கு மக்களிடம் காணப்படுகிறது. சிலர் வெளியே வெறும் வாய்வார்த்தைப் பேசினாலும் மனதிற்குள் ஒருவனை வரித்தே வைத்திருக்கிறார்கள். அவனைத் தலைவனாய் கொண்டவுடன் அவன் செய்வது அனைத்தும் இவர்களுக்கு வேதவாக்காகி விடுகிறது. இன்று ஒன்று பேசி, நாளை தலைவனே மாற்றிப் பேசினாலும் ஏற்றுக்கொள்ளும் மனது தொண்டர்களிடம் வந்துவிடுகிறது. பெரியாரின் ஏன்? எப்படி? என்ற கேள்விகள் வெளியிலேயே நின்றுவிடுகிறது. பெரியாரே வளர்த்த இயக்கத்திற்கும் இன்று அதே நிலைமையாகிவிட்டது. இவ்வாறு எதிர்த்து கேள்வி கேட்காதவர்களே ‘உண்மையானத் தொண்டர்கள் என்று தலைவர்களும் அவர்களை அடக்கி வைத்தே பழக்கப்படுத்துகிறார்கள். எதிர்த்து கேள்வி கேட்பவர்களை ‘புல்லுருவிகள் என்ற உருவகப்படுத்தி அவர்களை வெளியே அனுப்பிவிடுகிறார்கள். நேற்று தலைவர் ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்தால் அக்கட்சித் தொண்டர்களிடம் கூடிக்குலாவுவதும், மறுநாளே கூட்டணி முறிந்தால் இருவரும் அடித்துக்கொள்வதும் பழக்கமாகிவிட்டது. தலைவன் பேசியதை எதிர்த்துப்பேச திராணியில்லாதவர்கள் மட்டுமே அவர்களுடன் இருக்கமுடியும் என்ற நிலையாகிவிட்டது. அரசியல் கட்சிகள் என்றால் அதன் கொள்கைகள், முழக்கங்கள் அனைத்தும் இன்று வெறும் காகிதத்தில் மட்டும் காணும் வார்த்தைகளாய் போய்விட்டது.

அரசியல் அரங்கில் தலைவன் என்பவன் வாய்த்திறமை உடையவனாய் இருக்கிறான். வார்த்தைகளை மாற்றி மாற்றிப் போட்டே மக்களையும், தொண்டனையும் குழப்புவதையே கொள்கையாக வைத்திருக்கிறான். முதுகெலும்பில்லாத உயிரினமாய் மனிதன் என்று மாறிப்போனான் என்றே தெரியவில்லை. கட்சிகளும், இயக்கங்களும் ஆரம்பிக்கப்படும்போது இருந்தவர்கள் அதன் தலைவர்களாய் ஆனது ஒன்றும் தவறில்லை. ஆனால் அடுத்தடுத்தத் தலைமுறைகளில் அவர்களின் வாரிசுகள் மட்டுமே கட்சிக்கு தலைவர்களாய் இருக்கமுடியும் என்ற நிலை எப்போது உருவானது? தொண்டன் கடைசிவரை தொண்டனாகவும், தலைவனும் அவர்களின் வாரிசுகள் மட்டுமே கடைசிவரை தலைவனாக இருக்கமுடியும் என்றால் இது குடியாட்சி என்று எப்படி சொல்லமுடியும்? முடியாட்சி தத்துவங்கள் குடியாட்சி என்ற முறையில் இங்கு அரங்கேறுகிறது.

இதே நிலைதான் திரைத்துறைக்கும். தொலைக்காட்சியையும், சினிமாவையும் பார்த்தை வாழ்நாளின் பெரும்பகுதியைக் கழிக்கும் இடம் அனேகமாக செந்தமிழ்நாடாக மட்டுமே இருக்கும். தன் தலைவன் நடித்தப் படமென்றால் முதல்நாள் முதல் காட்சியைப் பார்க்க பொய்க்காரணம் சொல்லி விடுமுறை எடுக்கும் கேவலமான கலாச்சாரம் இங்கு உண்டு. இங்கு மட்டுமே உண்டா என்று தெரியவில்லை. திரையில் கதாநாயகனாக வலம்வரும் பெரும்பாலானோர் உண்மையில் அப்படி இருப்பதாகத் தெரியவில்லை. தன் விளம்பரத் தட்டிக்கு பால் ஊற்றி குளிப்பாட்டவும், முதல்நாள் கூச்சல் போடவும் இரசிகர்களை உசுப்பேற்றிவிட்டு அதனை வைத்தே தன் ஊதியத்தை உயர்த்திக்கொள்கிறான் தலைவன். இரசிகன் இது ஒன்றுமே தெரியாமல் இருக்கிறானா என்றுதான் தெரியவில்லை.

இதுவாவது பரவாயில்லை. கல்வித்துறையிலும் இன்று இந்த நாகரீகம் தலைத்தூக்குவதை கண்டு வேதனைதான் மிஞ்சுகிறது. கல்லூரி/பள்ளி நிர்வாகியோ, தலைமைப் பொறுப்பாளரோ வரும் இடமெல்லாம் கல்வி வள்ளலே என்றும், இன்றைய காமராசரே என்றும், இன்றைய பெரியாரே என்றும் சுவரொட்டி ஒட்டிக்கொள்வதைத்தான் பொறுக்க முடியவில்லை. உண்மையாகவே கல்வியைத் தந்து இன்றையத் தமிழ்த்தலைமுறையை தலைநிமிரச் செய்த காமராசருக்குக் கூட இந்த அளவு விளம்பரம் இல்லை. விளம்பரத்தை அவர் எதிர்பார்க்கவும் இல்லை. படித்தவர்கள் உலகிலேயே இந்த பாரம்பரியம் பரவினால் எல்லாத் தலைமுறையினருக்கும் மிக ஆபத்து.

தொண்டர்களே! உங்களின் விசுவாசம் கண்டு புல்லரித்துத்தான் போகிறது. ஆனால் நமக்கு கிடைக்கும் சிறு பயனுக்காக தகுதியில்லாதவர்களை எல்லாம் தலைத்தூக்கிக் கொண்டாடுவது சரியா என்று நீங்களே யோசித்துக்கொள்ளுங்கள். உங்கள் தலைவனுக்கு உண்மையிலேயே தகுதி இருப்பதாக நினைத்தால் அதனை மனதில் வைத்து அவர்களது கொள்கைகளை நடைமுறைப்படுத்துங்கள். அதைவிடுத்து தலைவனைப் பொய்யாய் புகழ்ந்து தரம் தாழ்ந்து போகாதீர்கள்.