வியாழன், 30 செப்டம்பர், 2010

நொறுக்குத் தீனி - (30.09.2010)

என்ன ஆயிற்று!
பல ஆண்டுகள் போராட்டம்... மாறி மாறி பேசினார்கள்... ஒருவழியாக மத்திய அரசும் தலையாட்டியது... திட்டமும் கோலாகலமாக துவங்கப்பட்டது... நான் சொல்வது சேது சமுத்திரத் திட்டம் பற்றிதான். எல்லாம் சரிதான். இப்போது என்ன ஆயிற்று? திட்டம் துவங்கியபோது இத்திட்டம் வருவதற்கு நாங்கள்தான் காரணம் என்று சொன்னவர்கள் இன்று பேசவே இல்லை. வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது என்றால், திட்டம் வருவதற்கு தேவையான வாதங்களை வைக்க தாங்களும் நேரில் சென்று தன்னையும் ஒரு வாதியாக ஏன் சேர்த்துக்கொள்ளவில்லை? ராமர் பாலத்தைக் காரணம் காட்டி நிறுத்தப்பட்ட இந்த திட்டத்தின் மதிப்பு 2400 கோடி ரூபாய்கள். இதில் முக்கால் பங்கு வேலை முடிந்துவிட்டது என்று வேறு கூறுகிறார்கள். தரையில் நடந்த வேலை என்றாலும் வேலை முடிந்ததற்கான ஆதாரமாக ஏதாவது இருந்திருக்கும். தண்ணீரில் உண்மையிலேயே வேலை நடந்ததா இல்லையா என்று கூட தெரியவில்லை. எது எப்படியோ நம் வரிப்பணம் 1800 கோடி முழுகிவிட்டது என்பது மட்டும் உண்மை. கண்ணுக்குத் தெரிந்த காமன்வெல்த் ஏற்பாடுகளிலேயே ஊழல் ஆறு பெருக்கெடுத்து ஓடுகிறது. கடலில்.....?

ஏன் இப்படி?
நண்பன் ஒருவன் நேரில் பார்த்த நிகழ்ச்சி. ஒருநாள் இரவு வடலூரில் இருந்து சேத்தியாத்தோப்பிற்கு சென்னையிலிருந்து காட்டுமன்னார்குடி செல்லும் அரசு பேருந்தில் வந்திருக்கிறான். சேத்தியாத்தோப்பு வந்து சேரும்போது இங்கே "விநாயகா" பேருந்து காட்டுமன்னார்குடி செல்ல அதன் நேரத்தைத் தாண்டியும் நின்று கொண்டிருந்திருக்கிறது. அதனைப் பார்த்த அரசு பேருந்து ஓட்டுனர், பேருந்தின் விளக்குகள் அனைத்தையும் நிறுத்திவிட்டு பேருந்து நிலையத்தில் வண்டியை நிறுத்திவிட்டார். "விநாயகா" பேருந்து புறப்பட்ட சிறிது நேரம் கழித்தே விளக்குகளை போட்டு காட்டுமன்னார்குடிக்கு செல்ல பயணிகள் இருக்கிறார்களா என்று பார்த்திருக்கிறார். யாரும் இல்லாததால் சொற்ப பயணிகளுடன் பேருந்து புறப்பட்டு சென்றிருக்கிறது. ஏன் இப்படி? "விநாயகா" பேருந்து சுகாதாரத்துறை அமைச்சர் பேருந்து என்றாலும் அதன் நேரத்தை தாண்டி நின்றது தவறு. அப்படியே நின்றாலும் அரசுப் பேருந்து ஓட்டுனர், அவர்களை எதிர்த்துப் பேசாமல் தனது நேரத்தில் பேருந்தை எடுத்துக்கொண்டு செல்லவேண்டியதுதானே? விசுவாசம் என்ற பெயரில் அரசுப் பணத்தை எதற்கு வீணடிக்கவேண்டும்? இதனை அமைச்சரே ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று நினைக்கிறேன்.

நகைச்சுவை!
நான் சமீபத்தில் படித்து ரசித்த நகைச்சுவை...
ஒரு கிளியை கூண்டில் அடைத்து வளர்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். அக்கிளியானது அவர்கள் தெரு வழியாக வந்த ஒரு பெண்ணைப் பார்த்து "ஏய்! நீ ரொம்ப அசிங்கமாக இருக்கே!" என்றது. அந்தப் பெண்ணுக்கு மிகவும் கோபம். இருந்தாலும் பேசாமல் சென்று விட்டாள். மாலை அந்தப்பெண் மீண்டும் அந்த தெரு வழியே வர அதே கிளி மீண்டும் "ஏய்! நீ ரொம்ப அசிங்கமாக இருக்கே!" என்றது. இப்படியே மூன்று நாட்கள் தொடர்ந்து நடக்க அந்தப்பெண் கிளியின் முதலாளியிடம் சென்று முறையிட்டாள். அவரும் கிளியை மிரட்டிவிட்டு, இனிமேல் இதுபோல் நடக்காது என்று உறுதி கூறினார்.
மறுநாள் அந்தப்பெண் அவ்வழியே வந்தாள். கிளி அந்தப் பெண்ணைப் பார்த்து, "ஏய்!" என்றது. அந்தப்பெண்ணும் திரும்பி என்ன என்று சிரித்துக் கொண்டே நக்கலாக கேட்டாள். கிளி சொன்னது... "நான் என் வாயால் சொல்ல மாட்டேன். ஆனால் உனக்கே தெரியும்!".