சனி, 4 செப்டம்பர், 2010

திரைப்படத் தலைப்புக்கு வரிவிலக்கு அவசியமா?

எங்கும் இது நடப்பது சாத்தியமில்லைதான். தமிழ்நாட்டினைத் தவிர... அரசியல் செய்ய வழியில்லாதபோது துக்கடா கட்சிகள் எல்லாம் தமிழ் திரைப்படங்களை குறிவைத்தன. திரைப்படத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்வதன் மூலம் சுலபமான விளம்பரமும் கிடைத்து விடும் என்பதுதான் அவர்களின் ஒரே நோக்கமாகவும் இருந்திருக்க முடியும். ஆனால் எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த காரணம் வேண்டுமே... அதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்த வழிதான் தமிழிலே பெயர் சூட்டுங்கள் என்பது...

தமிழ் மொழிக்காக உயிரையும் கொடுப்பேன் என்று வீரவசனம் பேசியவர்களின் சந்நதிகள் எல்லாம் ஆங்கில வழியில் படிக்கும் போது தொண்டர்களை தமிழிலே படிக்கத் தூண்டினார்கள் அந்த தலைவர்கள். அவர்களின் வாரிசுகளுக்கு முழுதாய் ஒரு வரி கூட தமிழில் பேச இயலாது என்பதுதான் இதுவரை நாம் கண்ட உண்மை. படிப்பினை உலகம் போகிறப்பாதையில் விட்டுவிட்டு தமிழின் அருமையினை அவர்களுக்கு சொல்லிக்கொடுப்பதை விடுத்து தமிழினை வைத்து அரசியல் செய்தார்கள் அந்த தலைவர்கள்.
அரசியல் பேசி தீர்க்க வேண்டிய பிரச்சனை ஆயிரம் இருக்க தமிழில் படங்களுக்கு பெயர் சூட்டவில்லை என்பதுதான் இவர்களுக்கு பெரிய பிரச்சனையாகிப் போனது. ஆங்கிலம் மட்டுமே அயல்மொழி என்று, ஆங்கிலத்தில் பெயர்கள் சூட்டினால் திரையரங்கை அடித்து நொறுக்குவோம் என ஒரு கும்பல் அரிவாள் தூக்கி கிளம்பியது. அப்படி பெயர்கள் இருக்கக்கூடாது, இப்படி பெயர்கள் இருக்கக்கூடாது என அரிச்சுவடி பாடம் நடத்தியது அடுத்த கும்பல். ஆனால் பெயர்களில் மட்டும் அக்கறை காட்டியவர்கள் படம் முழுதும் வார்த்தைக்கு வார்த்தை வந்த அயல்மொழி ஆதிக்கத்தை கண்டுகொள்ளவே இல்லை என்பதில் தெரிந்தது இவர்களின் அரசியல் புத்தி. சண்டியர் என பெயர் வைத்தால் வன்முறை நிகழும் என குதித்த கும்பல், படத்தின் தலைப்பினை விருமாண்டி என மாற்றிவிட்டு உள்ளே வரிக்குவரி வந்த சண்டியர் என்ற வார்த்தையை பற்றி கவலைகொள்ளாமல் வெற்றி வெற்றி என முழங்கிக் கொண்டது.

திரைத்துறையினரும் இவர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை. தமிழ்ப்படங்களுக்கு தமிழைத் தவிர அனைத்து மொழிகளிலும் தலைப்பினைத் தேடினார்கள். கிங், ஜாலி, பிரண்ட்ஸ், ரெட் என வாய்க்கு வந்ததை எல்லாம் படங்களின் பெயர்கள் ஆக்கினார்கள். அன்னை மொழியின் அருமை புரியாமல் தமிழ்மொழி எனக்கு தாய்ப்பால் ஊட்டியது என்று அறிமுகப்பாட்டு மட்டும் வைத்துக்கொண்டார்கள்.
இவர்கள்தான் இப்படி என்றால், இந்த பிரச்னையை தீர்க்கிறேன் என்று அரசு எடுத்த முடிவு அதைவிட கேலிக்கூத்து. தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்று வசதி படைத்தவர்களுக்கு வாரி வழங்கியது. பாத்திரம் அறிந்து பிச்சை போடாததன் விளைவு, திரையுலகம் இந்த வரிவிலக்கை இன்னும் கேலிக்கூத்தாகிவிட்டது.

போக்கிரி என்றும், பொறுக்கி என்றும், சண்டை, கெட்டவன், பன்னாடை, பரதேசி என்று தமிழில் வழக்கொழிக்க நினைக்கும் வாத்தைகளை எல்லாம் தலைப்பாக்கி தன் சுயமுகத்தை காட்டியது. சிவாஜி என்று பெயர் சூட்டி அதுவும் தமிழ்தான் என்று அடித்து பேசியது. திரையுலகம் சொல்வதை எல்லாம் கேட்டுக்கொள்ளும் அரசாங்கம் அது ஒரு பெயர் எனக்கூறி அதற்கும் வரிவிலக்கு அளித்தது. அதனைத் தொடர்ந்து கஜினி, பில்லா என்று அயல்மொழி வார்த்தைகள் அனைத்தும் தமிழாகிவிட்டன.
எப்படி செய்தாலும் திரைத்துறையினரை பகைத்துக்கொள்ள அரசு விரும்பவில்லை. திரையை வைத்தே ஆட்சியை பிடித்தவர்கள் ஆயிற்றே. அதிலும் திரைத்துறையும் இப்போது அரசின் வாரிசுகளிடத்தில் அடிமைப்பட்டு போனதால் இனி எதற்கெடுத்தாலும் வரிவிலக்குதான். சரி, தமிழில் பெயர் வைப்பதற்கு அவர்களுக்கு வலிக்கிறது. அயல்மொழி தலைப்புதான் வேண்டும்... ஆனால் வரிவிலக்கும் வேண்டும்... கூழுக்கும், மீசைக்கும் ஒரே நேரத்தில் ஆசைப்பட்ட மட்டபுத்திக்காரர்கள் இப்போது பயன்படுத்தும் யுக்தி அரசுக்கு தெரிகிறதா, இல்லை தெரியாததுபோல் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்களா என்பதுதான் எங்களுக்கு தெரியவில்லை.

படத்தின் தலைப்பினை முதலில் அயல்மொழியில் வைத்து விளம்பரப் படுத்திக்கொள்கிறார்கள். பிறகு வரி விலக்கிற்காக என்று ஒரு தமிழ்பெயர் வைத்து, அந்த அயல்மொழி தலைப்பினை உபதலைப்பு என்று அடியில் போட்டுக்கொள்கிறார்கள். இதனால் அவர்களுக்கு வரிவிலக்கும் கிடைத்துவிடும். அயல்மொழி தலைப்பிலேயே படமும் அழைக்கப்படும். என்ன ஒரு கேவலமான ராஜதந்திரம்.

முதன்முதலாக "சம்திங் சம்திங்" என்று படத்தின் தலைப்பினை விளம்பரப் படுத்திவிட்டு சலுகைக்காக "உனக்கும் எனக்கும்" என தலைப்பை மாற்றியவர்கள் ஜெயம் ரவி குடும்பத்தார். இன்றும் அப்படம் மக்களால் "சம்திங் சம்திங்" என்றே அழைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கு வரிவிலக்கும் கிடைத்துவிட்டது. இதனைத் தொடர்ந்து ரோபோ எந்திரன் ஆனது, குவார்டர் கட்டிங் "வ" ஆனது. இப்படியே இன்னும் பல... ஏன்? இவர்களுக்கு முன்பே இது அயல்மொழித் தலைப்பு என்று தெரியாதா? பிறகேன் முதலில் ஒரு பெயர் வைக்கவேண்டும். பிறகு தலைப்பை மாற்றவேண்டும்.

இப்படி தாய்மொழியில் தலைப்பினை வைக்க யோசிப்பவர்களுக்கு எதற்காக சலுகைகளை வழங்கவேண்டும்? அனைத்து திரைப்படங்களுக்கும் கேளிக்கை வரியினை கட்டாயமாக்கி, அயல்மொழியில் தலைப்பினை வைக்கும் படங்களுக்கு இருமடங்கு கேளிக்கை வரி விதித்தால் என்ன? அரசுக்கு வருமானமும் வரும். தலைப்பும் தமிழினில் கிடைக்கும். முழு திரைப்படத்திலும் ஆரம்பத்தில் போடும் தலைப்பில் இருந்து இறுதியில் வரும் வணக்கம் வரை அயல்மொழி கலப்பில்லாமல் வசனங்களும், எழுத்துக்களும் இருந்தால் அரசு வரிவிலக்கு அளித்துவிட்டு போகட்டும்.

உள்ளுணர்வு கொஞ்சம் கூட இல்லாமல், வரிவிலக்கு அளித்தால்தான் தமிழினைத் தொடுவோம் என்பவர்களுக்கு மென்மேலும் சலுகைகள் வாரிவழங்குவது எந்த விதத்தில் நியாயம்? இந்த செயலில் அரசு, அரசியல்வாதிகள், திரைத்துறையினர் அனைவரும் பொதுமக்களை ஏமாற்றுகின்றனர் என்பதே உண்மை.

(குறிப்பு: திரையரங்குகளில் அதிக விலைக்கு விற்கப்படும் நுழைவுச் சீட்டினைப் பற்றிய செய்திகளையும், தயாரிப்பு நிறுவனங்கள் வைத்திருக்கும் அயல்மொழி பெயர்களை பற்றியும் சொல்லவே இல்லை... அதனை எடுத்தால் இப்போது இந்த பதிவு முடியாது)

4 comments:

மோகன் குமார் சொன்னது…

உங்களின் இந்த பதிவை இன்று வலைச்சரத்தில் குறிப்பிட்டு எழுதி உள்ளேன். இயலும் போது வாசிக்கவும்

http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_17.html

அமைதி அப்பா சொன்னது…

வலைச்சரத்தில் திரு. மோகன் சார் எழுதியதைக்கொண்டு இங்கு வந்தேன்.
நல்ல பதிவு.
பார்ப்போம்!

அன்பரசன் சொன்னது…

நல்ல பதிவுங்க..

தமிழன் சொன்னது…

@மோகன் குமார்...
மிக்க நன்றி நண்பரே... அடுத்தவரின் எழுத்தை அங்கீகரித்து ஊக்கப்படுத்தும் தங்களின் செயலுக்கு என் வணக்கங்கள்...

@அமைதி அப்பா...
மிக்க நன்றி நண்பரே... தொடர்ந்து ஆதரவளியுங்கள்.

@அன்பரசன்...
மிக்க நன்றி நண்பரே... தொடர்ந்து ஆதரவளியுங்கள்.