
தமிழ்த் தீவிரவாதி மாறனை யாரும் மறந்திருக்க முடியாது. கன்னட நடிகர் ராஜ்குமாரை, சந்தனக் கடத்தல் வீரப்பன் கடத்திச் சென்ற காலகட்டத்தில் காடுகளில் இருந்து நாட்டைக் கலக்கிய மனிதர்களில் மாறனும் ஒருவர். அதன் பிறகு விவசாயியாகத் தன்னை அடையாளம் காட்டினார். இப்போது சம்சாரியாக மாறி... மாறனுக்குக் கல்யாணம்!
கும்பகோணம் அருகே அணைக்கரையில் 'தமிழ்த் தீவிரவாதி மாறன்' என்று அழைக்கப்படுகிற செங்குட்டவனுக்கும், கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு சென்னிநத்தம் ஊரைச் சேர்ந்த ஜெயந்திக்கும் கடந்த அக்டோபர் 10-ம் தேதி திருமணம் நடந்தது. தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் நடந்த இந்தத் திருமணத்தை 'இணையேற்பு விழா' என்று சொன்னார்கள். திருமண தினத்தின் காலையிலேயே தமிழ் உணர்வாளர்களும், சிறைத் தோழர்களும் செந்திலாண்டவன் திருமண மண்டபத்தில் குவியத் தொடங்கினர்.
அழைப்பிதழ் முகப்பில் தமிழ்நாடு விடுதலை இயக்கத் தலைவராக இருந்த 'பொன்பரப்பி' தமிழரசனின் படமும், உள்பக்கம் சேகுவேரா மற்றும் பிரபாகரன் படங்களும் இருந்தன. திருமண மண்டபத்தில் பல இடங்களில் புத்தகங்கள், தமிழ் இனப் போராட்டம் தொடர்பான சி.டி.க்கள் மற்றும் மூலிகை மருந்துகள் விற்பனை செய்யப்பட்டன. தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றதுடன், விழாவுக்கு வந்தவர்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.
இந்திய தேசிய லீக் அமைப்பாளர் 'தடா' ரகீம், ஆலப்பாக்கம் 'தடா' முருகேசன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தா.செ.மணி, தமிழ் தேச விடுதலை இயக்கத் தலைவர் தியாகு என, தடா, பொடா ஆட்களாகக் குவிந்திருந்தார்கள்.
"இது தமிழ்ப போராளிகள் சங்கமித்த விழா..." என பேசத் தொடங்கிய தமிழர் கழகத்தின் தலைவர் புதுக்கோட்டை இரா.பாவாணன், "மாறன், ஓர் உண்மையான போராளி. ஆடம்பரத்தை விரும்பாமல், பசியோடும் பட்டினியோடும் வாழ்ந்தவர். சிறையில் இருக்கும்போதே தமிழில் முதுகலைப் பட்டமும், ஆய்வுப் பட்டமும் பெற்றவர். தமிழ்த் தேசியத்தோடு பொதுவுடைமை மலர வேண்டும் என்பதில் உறுதி கொண்டவர். 'தமிழர் விடுதலைப் படை' தடை செய்யப்பட்டபிறகு, பல்வேறு குழுக்கள் இதில் இருந்து வந்தாலும் அவை கட்டப் பஞ்சாயத்து இயக்கங்களாக மாறின. ஆனால், இவர் மட்டும் உண்மையானவர் என்பதால்தான், அனைவரும் ஒன்றுபட்டு வந்திருக்கிறோம்'" என்றார்.
"மாறன், தீவிரவாதப் பாதையில் இருந்து மாறிவிட்டார்..." எனப் பேசத் தொடங்கிய மாறனின் நண்பர்கள், "தமிழ்த் தீவிரவாத அமைப்புகளில் குறிப்பிடத்தக்க அடையாளம் பெற்றவர் மாறன். வீரப்பனை தமிழ்த் தேசிய அரசியலில் கொண்டு வந்ததிலும் மாறனின் பங்கு குறிப்பிடத்தக்கது. போலீஸாரால் 'மாஸ்டர் பிரெய்ன் மாறன்' என்று சித்தரிக்கப்பட்டவர். தமிழரசன், வீரப்பன் ஆகியோரிடம் நெருக்கமான உறவு வைத்திருந்த மாறன், அடுத்தடுத்துப் பல்வேறு வழக்குகளில் சிக்கவைக்கப்பட்டார். தலைமறைவு வாழ்க்கையும், சிறையுமாகத் தனது இளம் பருவ வாழ்க்கையை முற்றிலுமாக இழந்துவிட்டார்.
தற்போது, 'தமிழகத்தில் ஏற்பட்டு இருக்கும் சமூக மாற்றங்களும், தமிழர்களுக்காகப் போராடுபவர்களே பிரிந்து கிடக்கும் நிலையிலும்... ஆயுதம் ஏந்திய போராட்டம் இனி சரியான வழியாக இருக்காது!' என நினைத்த மாறன், விவசாயத்தின் பக்கம் தனது கவனத்தைத் திருப்பினார். ஆனாலும், அரசும் காவல் துறையும் தொடர்ந்து அவரது நடவடிக்கைகளைக் கண்காணித்து வந்தன. இந்த நிலையில், தற்போது நிகழ்ந்த விழுப்புரம் தண்டவாளத் தகர்ப்பு சம்பவத்தில்கூட போலீஸாரால் அவர் விசாரிக்கப்பட்டார். 'மாறன் இன்னும் தீவிரவாதப் பாதையில் இருந்து விலகவில்லையா?' என்கிற கேள்வி எல்லோரிடமும் மீண்டும் எழுந்தது. ஆனால், தீவிர விசாரணைகளுக்குப் பிறகு, 'மாறனுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை!' என்று விடுவிக்கப்பட்டார். இல்லற வாழ்க்கைக்குத் திரும்பி இருப்பதன் மூலம், தான் அமைதியாக வாழ விரும்புவதை மேலும் தெளிவுபடுத்தி இருக்கிறார்!' என்று சொல்கிறார்கள்.
புது மாப்பிள்ளை மாறனுக்கு வாழ்த்துகள் தெரிவித்துவிட்டு அவரிடம் பேசினோம். "இது நிச்சயிக்கப்பட்டத் திருமணம். என்னுடன் சிறையில் இருந்த தோழர் உத்திராபதியின் உறவினர் பெண் ஜெயந்தி. தமிழ்த் தேசிய சிந்தனைகளை பொதுமக்களிடம் கொண்டுசெல்லும் தோழர்கள் அனைவரையும் அழைத்துப் பெருமைபடுத்த நினைத்தேன். அதன்படி, அனைவரும் விழாவுக்கு வந்தனர். என் மீது வழக்குகள் இன்றும் நிலுவையில் உள்ளன. ஜாமீனில்தான் வந்திருக்கிறேன்..." என்றார் மிகத் தெளிவான தொனியில்!
நன்றி: ஜூனியர் விகடன்
0 comments:
கருத்துரையிடுக