திங்கள், 25 அக்டோபர், 2010

கடலூர் மாவட்ட வாழ்வாதாரம் பறிக்கும் என்.எல்.சி.

இந்தப் பதிவு சிலருக்கு எரிச்சலைக் கிளப்பலாம். சிலருக்கு சுகமாக இருக்கலாம். சிலரை சிந்திக்கத் தூண்டலாம். சிலருக்கு என்னைத் திட்டவும் தோன்றலாம். உணர்ச்சிகள் என்பது மனிதமனம் சம்மந்தப்பட்டது. உண்மை என்பது உண்மையானது. நான் சொல்ல்ப்போகும் அனைத்தும் எங்கள் சிந்தனையில் தோன்றியது. மறுப்பு தெரிவிப்பவர்கள் தாராளமாக பின்னூட்டம் இடலாம்.

அண்மைக்காலமாக எந்த செய்தி நம் கண்ணில் படுகிறதோ இல்லையோ மாதம் ஒருமுறையாவது நெய்வேலி என்.எல்.சி. ஊழியர்கள் வேலைநிறுத்தம் மட்டும் தவறாமல் கண்ணில் படுகிறது. ஊதிய உயர்வுக்கோரி, படிகள் வழங்கவேண்டி, நிரந்தரம் செய்யவேண்டி என ஏதாவது ஒரு காரணம் வைத்து இவர்களின் வேலைநிறுத்தம் மட்டும் தவறாமல் நடந்துகொண்டிருக்கிறது.

என்.எல்.சி. என்று அழைக்கப்படும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் இப்போது ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரமாக்க வேண்டுமென்று கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெற்று வருகின்றது. இந்த வேலை நிறுத்தத்தில் ஆரம்பத்தில் கலந்துகொண்ட தி.மு.க.வின் தொழிற்சங்கமான தொ.மு.ச. விலகிக் கொண்டது. மீதியுள்ள தொழிற்சங்கங்கள் போராட்டத்தைத் தொடர்கின்றன. இந்த தொழிற்சங்கங்களுக்கு தி.மு.க., காங்கிரஸ் தவிர்த்த அனைத்து கட்சிகளும் ஆதரவு தந்து வேலைநிறுத்தத்தை சாலை மறியல், கடையடைப்பு என வேறு பாதைக்கு எடுத்துச் சென்று கொண்டிருக்கின்றன.

இந்த நேரத்தில் சாதாரணமாக எல்லோருக்கும் சில சந்தேகங்கள் எழும்பலாம். ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்பவர்களுக்கும் என்.எல்.சி. நிறுவனத்திற்கும் நேரடியாக தொடர்பு எதுவும் கிடையாது. ஒப்பந்தத் தொழிலாளர்கள் அவர்களை வேலைக்கு அமர்த்தி என்.எல்.சி.யில் ஒப்பந்தப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நிறுவனத்தைச் சார்ந்தவர்கள். அப்படியிருக்க அவர்கள் போராட வேண்டியது ஊதிய உயர்வு வேண்டி தன்னை பணியில் அமர்த்தியிருக்கும் ஒப்பந்த நிறுவனத்தை எதிர்த்துதான். இல்லையென்றால், பணி அனுபவம் கொண்ட எங்களுக்கு நிரந்தரப் பணியினைத் தாருங்கள் என்று என்.எல்.சி. நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கலாம். இப்பிரச்சினைப் பற்றிய ஒரு மாறுபட்டப் பதிவு இங்கே.

மத்திய அரசுப் பணிகளிலேயே எங்களுக்குத் தெரிந்து குறைவான கல்வித்தகுதி கொண்டவர்கள் கூட அதிக ஊதியம் பெறுவது என்.எல்.சி.யில் மட்டும்தான். இருந்தும் எதற்காக இவர்களின் வேலைநிறுத்தம் என்றுதான் புரியவில்லை. ஊதிய உயர்வு வேண்டும் என்று இவர்கள் போராடுவது எல்லாம் சரிதான். ஆனால் வேலைநிறுத்தத்தில் மக்களுக்கு இன்றிமையாத பொருளாகிவிட்ட மின்சாரம் தயாரிப்பதை இவர்கள் நிறுத்துவதால் ஏற்படும் இழப்பீட்டுக்கு யார் பொறுப்பாவது?

இப்போது இவர்கள் வேலை நிறுத்தம் செய்வது ஒப்பந்த தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்யவேண்டி ஆகும். இப்போது இருக்கும் ஒப்பந்தத் தொழிலாளர்களாக இருக்கும் பலபேர் நிரந்தரத் தொழிலாளர்களுக்கு இரத்த உறவாகவே இருக்கின்றனர் என்பதுதான் நாங்கள் விசாரித்தவரையில் அறிந்த உண்மை. தன் பிள்ளைகளையும், உறவுகளையும் படிக்கவைத்து அவர்களை ஒப்பந்த தொழிலாளர்களாக உள்ளே அனுப்பிவிட்டு அவர்களை நிரந்தரம் செய்யச்சொல்லி இவர்களே போராடி வேலை வாங்கி கொடுத்துவிடுகின்றனர். எந்த ஒரு நிறுவனத்திலும் ஒப்பந்த தொழிலாளராக வேலைக்கு சேருவது என்.எல்.சி. போல கடினமாக இருக்கமுடியாது. இங்கு மட்டும்தான் ஒப்பந்தத் தொழிலாளர்களாக வேலைக்கு சேரவே குறிப்பிட்ட அளவு பணம் கொடுக்கவேண்டும் என்பதும், அப்படியும் சேருவது என்பது மிகவும் கடினம் என்றும் கேள்விப்படுகிறோம்.

இதனால் அதிகம் இழப்பை சந்திப்பது எங்கள் கடலூர் மாவட்ட மக்களே! என்.எல்.சி-க்காக நிலத்தையும் இழந்து அதற்கு உண்டான உரிய நிவாரணமும் கிடைக்காமல் வேலைக்கும் உத்தரவாதம் இல்லாமல் எங்கள் மக்கள் தவிக்கும் தவிப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நிலத்தை எடுத்துக்கொண்டு அவர்கள் அளிக்கும் அரசு மதிப்பீடுத் தொகையில் ஒன்றுமே செய்யமுடியாது என்பது உலகறிந்த உண்மை. மேலும் வாழ்வாதாரமாக இருந்த நிலத்தை இழந்தவர்கள் மீண்டும் எங்கு அதுபோல் இடம் வாங்கமுடியும்?

நிலத்தை எடுத்த என்.எல்.சி. முன்பெல்லாம் வீட்டில் ஒருவருக்கு வேலை அளித்தது. அண்மைக்காலமாக அதுவும் இல்லை. அதனால் நிலத்தினை இழந்தவர்கள் படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல. என்.எல்.சி.யில் வேலையில் இருக்கும் பெரும்பாலானோர் வெளிமாநிலக்காரர்களே ஆவார்கள். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். தகுதியுள்ள சொந்தமண்ணின் மக்களுக்கு வேலை அளிக்காமல் முழுக்க முழுக்க ஏற்கனவே வேலைசெய்யும் தொழிலாளர்களின் வாரிசுகளே வேலைக்கு வருகிறார்கள். என்.எல்.சி-யால் எங்கள் கடலூர் மாவட்ட மக்களுக்கு, ஏன் தமிழகத்துக்கே பயன் உண்டா? இங்குத் தயாரிக்கப்படும் மின்சாரம் பெரும்பாலும் வெளிமாநிலத்துக்கே செல்கிறது.

என்.எல்.சி. நிறுவனத்தால் ஏதோ நிலம் கொடுத்தவர்களுக்கு மட்டும்தான் பாதிப்பு என்று கொள்ள வேண்டாம். எங்கள் கடலூர் மாவட்ட மக்களுக்கே பெரிய பாதிப்புதான். கரி எடுக்க தோண்டும் பெரிய பெரிய சுரங்கங்களால் நிலத்தடி நீர்மட்டம் பல அடிகள் குறைந்துள்ள அதலபாதாளம் நோக்கி சென்று கொண்டிருக்கிறது. எங்களுக்கு விவரம் தெரிந்தே பதினைந்து, இருபது அடி தூரத்தில் குடிநீர் எடுத்த நாங்கள் இன்று 100 அடிக்கு மேல் தோண்டினாலும் தண்ணீர் கிடைப்பதில்லை. மேலும் பூகம்பம் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ள மாவட்டமாக இப்போது கடலூர் மாவட்டமும் குறிக்கப்பட்டுவிட்டது.

வாங்கும் சக்தி அதிகம் கொண்ட என்.எல்.சி. ஊழியர்களால் விலைவாசி வெகுதூரத்திற்கு சென்றுவிட்டது என்பது யதார்த்த உண்மை. முன்பெல்லாம் முருங்கைக்கீரையினை யார் வேண்டுமானாலும் யார் வீட்டு மரத்தில் வேண்டுமானாலும் பறித்துக்கொள்ளலாம். ஆனால் இப்போது கையை வைத்தால் திட்டுதான் விழுகிறது. எங்கள் மக்களுக்கு எளிதாகக் கிடைத்த பொருள் என்.எல்.சி. ஊழியர்களால் விலைக்கு வாங்கப்படுவதால் இப்போது கிடைக்காமல் போய்விட்டது. இது ஒரு சிறு உதாரணம்தான். இதுபோல் அனைத்துப்பொருட்களையும் அங்கு சென்றால் அதிக விலைக்கு விற்கலாம் என்ற எண்ணத்தில் அனைத்து விளைப்பொருட்களின் விலையும் தாறுமாறாக ஏறிக்கொண்டிருக்கிறது.

என்.எல்.சி. நிறுவனம் நம் மாவட்டத்தின் பல நீரோட்டங்களின் போக்கையே மாற்றிக்கொண்டிருக்கிறது. வெட்டி வெட்டி வளையமாதேவி வரை வந்துவிட்டவர்கள் இன்னும் சில ஆண்டுகளிலேயே வெள்ளாற்றைப் பறிக்க ஆரம்பித்துவிடுவார்கள். பெரியக்குப்பம், சின்னக்குப்பம் பகுதிகளில் என்.எல்.சி.யினர் நுழைந்து ஆற்றினைப் பறிக்கும்போது அதற்குப்பிறகு வரும் சேத்தியாத்தோப்பு, புவனகிரி, பரங்கிப்பேட்டைப் பகுதிகளின் நிலை பாலைவனமாவதை தடுக்கமுடியுமா என்பது கேள்விக்குறி.

இவற்றையெல்லாம்விட வரதட்சணைக்கொடுமை அதிகமுள்ள மாவட்டத்தில் கடலூர் மாவட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. கைநிறைய ஊதியம் வாங்கும் ஊழியர்கள் அதிக தட்சணை தருவதற்கு தயாராக இருப்பதால் 25 பவுனுக்கு குறைந்து யாரும் இங்கு வரதட்சணை வாங்குவதே இல்லை. இவையெல்லாம் ஏதோ கடலூர் மாவட்ட மக்களுக்கு மட்டுமே உரித்தான பிரச்சனை என்பதுபோல காட்டுகிறேன் என்று எண்ணாதீர்கள். அனைத்து மாவட்டங்களிலும் இந்தப் பிரச்சனைகள் இருந்தாலும் கடலூர் மாவட்டத்தில் இவையெல்லாம் அதிகம் என்பது இங்குள்ள மக்களுக்கு நன்றாகவேத் தெரியும்.

என்.எல்.சி.யில் மண்ணின் மைந்தர்களுக்கு தகுதி அடிப்படையில் வேலைக் கொடுத்திருந்தால் பட்டயப்படிப்பு, தொழிற்படிப்பு படித்த வேலையில்லாத இளைஞர்கள் கடலூர் மாவட்டத்தில் இருந்திருக்க மாட்டார்கள். ஆனால் இன்றோ வேலையில்லாதவர்களில் இந்தப்படிப்பு படித்தவர்களே அதிகம்.

சரி... என்.எல்.சி. இந்தப்பகுதி மக்களுக்கு ஏதுமே செய்யவில்லையா? என்று வாதம் புரிபவர்களுக்கு... செய்திருக்கிறது. பல கிராமங்களுக்கு குடிநீர்த் தொட்டிகளும், சாலை உள்ளிட்ட சில அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது. ஆனால், என்.எல்.சி. நிர்வாகம் இங்கே இவ்வளவு ஆழத்திற்கு நோண்டவில்லையென்றால் குடிநீர்த் தொட்டிக்கே இங்கு அவசியம் வந்திருக்காது என்பதையும் எண்ணிப் பாருங்கள்.

என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு உண்மையிலேயே வேலை வாங்கி கொடுக்கும் நோக்கில் அனைத்துக் கட்சிகளின் போராட்டங்களும் அமையும் பட்சத்தில் நாங்கள் பாராட்டுகிறோம். அதே நேரத்தில் என்.எல்.சி.யால் வாழ்வாதாரம் இழந்து கொண்டிருக்கும் கடலூர் மாவட்ட மக்களுக்கு உங்களால் செய்யக்கூடிய உதவி என்ன? என்பதையும் கேள்வியாய் வைக்கிறோம். குறைந்தபட்சம் எங்கள் மாவட்டத்தில் முறையான தகுதிபெற்று வேலைக்குக் காத்திருக்கும் இளைஞர்களுக்காவது என்.எல்.சி. வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளித்தால் நாங்களும் சேர்ந்து மகிழ்வோம். இதுதான் எங்கள் மாவட்ட மக்களின் முழு எதிர்பார்ப்பும்!

கருத்து: புதினன்

ஆக்கம்: தமிழன், உராங் உட்டான்