கலெக்டர் ஆஷை சுட்டுக்கொன்று தன்னையும் மாய்த்துக்கொண்ட மாவீரன் வாஞ்சிநாதனுக்கு இன்று நூற்றாண்டு நினைவு தினம். அவரைப் பற்றிய சிறு நினைவு கூறலுக்கு நாம் மகிழ்கிறோம்.
இந்தியப் புரட்சி இயக்க வரலாற்றை எழுதும் வரலாற்றாசிரியர்கள், புரட்சி அமைப்புகளும், புரட்சி வீரர்களும் வட இந்தியாவில் உள்ள பஞ்சாப், ஐக்கிய மாகாணம், மராட்டியம், வங்காளம் முதலிய மாநிலங்களில் மட்டுமே தோன்றி வீர சாகசம் புரிந்திருப்பதைக் கண்டு, புருவத்தை நெருக்கி யோசிக்க நேரிடும். ‘ஏன் தென்மாநிலங்களில் புரட்சி இயக்கங்களோ வீரர்களோ தோன்றவில்லை?’என்ற கேள்விக்கு விடை காண முடியாமல் திணற நேரிடும்.
இதற்கு உண்மையான காரணம்தான் என்ன? வீரத்தில் தமிழகம் தாழ்ந்ததா? தியாகத்தில் தமிழகம் குறைந்ததா? தேசபக்தியிலாவது தமிழகம் தரம் தாழ்ந்ததா?
அப்படி ஒன்றும் இல்லை. வீரமும், தியாகமும், தேசபக்தியும் இந்தத் தமிழ் மண்ணில் பிறந்தவைதான். வீரத்தையே கடவுளாக்கி வழிபட்ட நாடு இது. வீரத்தையே விளையாட்டாக்கி வீர விளையாட்டில் வெல்வோருக்கே தங்கள் பெண்களை மணமுடித்துக் கொடுத்த வீரத் தந்தையர் வாழ்ந்த பூமி தமிழ்ப்பூமி. வீரத்தையே புறநானூற்று இலக்கியமாக்கி போதித்த பூமி இது. கைக்கிள்ளைக்கு கனிவோடு பாலூட்டும் போதே வீரத்தையும் சேர்த்து ஊட்டிய வீரத்தாய்மார்கள் அவதரித்த மண் இது. இந்தியாவிலேயே முதன்முதலாக வெள்ளையரே எதிர்த்துப் போர்க்கொடி உயர்த்திய பாஞ்சாலங்குறிச்சிப் பாளையர்க்காரரான மாவீரன் பூலித்தேவன், ஊமத்துரை, வெள்ளையத்தேவன், மருது பாண்டியர், கட்டபொம்மன், வேலுநாச்சியார் போன்ற வீர மறவர்கள் பிறந்து வாழ்ந்த பூமி இது. அப்படிப்பட்ட வீரமண்ணில் புரட்சி இயக்கங்கள் தோன்றி வளராததற்குக் காரணம், இடைக்காலத்தில் ஏற்பட்ட இலக்கிய வளர்ச்சியும், சங்கீத ஈடுபாடும், வெளிநாட்டுத் தொடர்புக் குறைவும்தான்.
புரட்சி இயக்க நடைமுறைகள் இந்த மண்ணுக்கு அன்னியமானவை. ஐரோப்பிய நாடுகளில் தோன்றி வளர்ந்தவை. விடுதலைப் போரில் அதுவும் ஓர் அங்கீகரிக்கப்பட்ட போர்முறை என்பதை தமிழர்களும் சரி; தென் மாநிலங்களும் சரி தெளிவாக அறிந்திராததும் ஒரு காரணம் என்று கூறலாம். இன்னொரு முக்கியமான காரணம், நீண்ட நெடுங்காலமாகவே இந்திய நாட்டின்மீது படையெடுத்து வந்தவர் அனைவரும், முப்புறமும் கடல் சூழ்ந்த தென்னிந்தியாவை விட்டு, மலை சூழ்ந்த வட இந்தியாவின் வழியாகவே நம் நாட்டுக்குள் புகுந்து முன்னேறியதும் ஒரு காரணம்.
செங்கிஸ்கான், அலெக்சாண்டர், பாபர் என்று வரிசையாய் வந்த படையெடுப்பாளர் ஒவ்வொருவரும் தாக்கியது வட இந்தியாவையே. அவர்களை எதிர்த்துப் போரிட்டுப் போரிட்டு போர்க்குணத்தைப் பெருக்கிப் பெருக்கி, எப்போதும் போர் வீரர்களாகவே வாழ்ந்தவர்கள் – வாழ நிர்பந்திக்கப்பட்டவர்கள் வட இந்தியர்கள்தான். அந்த போர்க்குணம்தான் புரட்சி இயக்க நடைமுறை அறிவைத் தேடிப் பெறுவதிலும் அதை ஆங்கிலேயருக்கு எதிராகப் பயன்படுத்துவதிலும் அவர்களை முதல்வர்களாக்கியது.
நாஞ்சில் நாட்டு மாவீரன் செண்பக இராமன் 15வது வயதிலேயே ஜெர்மனிக்குச் சென்று, 22வது வயதில் ஐ.என்.வி. படையைத் திரட்டி ஜெர்மானிய சக்கரவர்த்தி கெய்சரின் உதவி பெற்று இந்தியாவை விடுதலை செய்ய முயன்றதும் 1914ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் தேதியன்று ஜெர்மானிய யுத்தக் கப்பலான ‘எம்டன்’ கப்பலின் துணை கேப்டனாக சென்னைக்கு வந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டை மீது பீரங்கிக் குண்டை ஏவி, பிரிட்டிஷாரை கதிகலங்க வைத்ததும், பின்னர் 1915 டிசம்பர் 1இல் ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் இராஜா மகேந்திர பிரதாப் என்ற இந்திய புரட்சி வீரர் அமைத்த ‘சுதந்திர இந்திய அரசு’ அமைச்சரவையில் அமைச்சராக நியமிக்கப்பட்டதும் தமிழ்நாட்டு மக்களுக்கு அவ்வளவாகத் தெரியாத செய்திகள் ஆகும்!
‘ஜெய்ஹிந்த்’ என்ற வீர முழக்கத்தை தந்தவர் செண்பக இராமன். அதை ஏற்று உலகறிய முழங்கியவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். ‘ஐ.என்.ஏ’ விடுதலைப் படையின் முன்னோடிப் படையான ‘ஐ.என்.வி’ படையை அமைத்தவர் செண்பக இராமன். அதைப் பின்பற்றி ஐ.என்.ஏ. படை திரட்டியவர் ராஷ்பிகாரிபோஸ். பின்னர் அதற்குத் தலைமையேற்று ‘டெல்லி சலோ’ என்று முழங்கி இம்பால் போர்முனையில் வீரம் விளைத்தவர் சுபாஷ் சந்திரபோஸ். ஆம்; இந்திய விடுதலைப்போரில் தமிழர் மற்றும் தென்னிந்தியரின் பங்கு குறைவானதல்ல!
படையோடு பாய்ந்ததிலும் தமிழர்தான் முன்னோடி. அயல்நாட்டில் விடுதலைப்படை திரட்டியதிலும் தமிழர்தான் முன்னோடி. இருப்பினும் உள்நாட்டில் புரட்சி இயக்கங்களைக் கட்டி வளர்ப்பதில் மட்டும் சற்றே பின் தங்கிவிட்டனர் தமிழர்கள். பிற்காலத்தில் ஆகஸ்டுப் புரட்சியில் அதனை ஈடுகட்டுவதுபோல குலசேகரப்பட்டினம், தேவகோட்டை, சென்னை முதலிய நகரங்களில் துப்பாக்கி ஏந்தியும், வெடிகுண்டு வீசியும் வீரம் விளைத்தனர் தமிழர்.
ஆனாலும் புரட்சி இயக்கங்கள் எதையும் தோற்றுவித்து வளர்க்காததால் இங்கொன்றும் அங்கொன்றுமாக சில தனிநபர் வீரசாகசங்களோடு தமிழகப் புரட்சி இயக்க வரலாறு நின்று விடுகிறது. இந்தக் குறையை ஓரளவுக்கேனும் போக்கிய மாவீரன்தான் வாஞ்சிநாதன். ‘திக்கெல்லாம் புகழும் திருநெல்வேலி’ என்று திருஞானசம்பந்தரால் பெருமைப்படுத்திப் பாடப்பெற்ற நெல்லை மாவட்டத்தில், அகத்திய மாமுனி வாழ்ந்த பொதிகை மலை அடிவாரத்திலுள்ள தென்காசிக்கருகில், கேரள எல்லையில் உள்ள செங்கோட்டையில் வாழ்ந்து வந்த ரகுபதி ஐயர் என்ற ஏழைப் பிராமணரின் மகன்தான் வாஞ்சிநாதன்.
25 வயதே ஆன அந்த இளைஞன் சிறுவயது முதலே தேசிய இயக்கத்தில் பற்று கொண்டவன்; விவேகானந்தரின் வீராவேசப் பேச்சுக்களிலும் போதனைகளிலும், பாரதியாரின் கவிதைகளிலும் ஆழ்ந்த மோகம் கொண்டவன். வீரசாவர்க்கரின் வீரசாகசங்களிலும் வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா ஆகியோரின் கனல் தெறிக்கும் தேசாவேச சொற்பொழிவுகளிலும் மனத்தைப் பறிகொடுத்தவன்.
1908ஆம் ஆண்டிலேயே பிரிட்டிஷாரின் பிடியிலிருந்து தப்புவதற்காக தேசியக்கவி சுப்பிரமணிய பாரதியார் பாண்டிச்சேரிக்குச் சென்று, எம்.பி.திருமலாச்சாரியாரின் உதவியோடு ‘இந்தியா’ என்ற வாரப் பத்திரிக்கையை அங்கிருந்து நடத்தி வந்தார். அவருக்கு உதவியாக என்.நாகசாமி, சுந்தரேச ஐயர் ஆகியோர் இருந்து வந்தனர். மண்டபம் சீனிவாசாச்சாரியாரும் சில நாட்களில் பாண்டிச்சேரிக்குச் சென்றார்.
1909ஆம் ஆண்டின் இறுதியில் இலண்டனிலிருந்து மாறுவேடத்தில் தப்பி பிரான்சுக்குச் சென்ற வ.வே.சு.ஐயர், பிரான்சிலிருந்து சிங்கப்பூர் வழியாகப் பாண்டிச்சேரிக்கு வந்து பாரதியாரோடு சேர்ந்துகொண்டார். 1910ஆம் ஆண்டில் வங்காளத்தில் தலைமறைவாகி பிரெஞ்சுக் காலனியாக இருந்த சந்திரநாகூருக்குச் சென்று வசித்து வந்த அலிப்பூர் சதிவழக்கு நாயகர் அரவிந்த கோஷ், பாண்டிச்சேரிக்கு வந்து அடைக்கலம் புகுந்தார்.
பாண்டிச்சேரி பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்ததால், பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து தலைமறைவாக வாழ விரும்பிய சுதந்திரப் போராட்ட வீரர்களுக்குப் பாதுகாப்பான செயல் தளமாக இருந்தது. பிரிட்டிஷ் அரசின் கவனமும் பாண்டிச்சேரியின் மேல் விழுந்தது. ஏராளமான பிரிட்டிஷ் சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர்கள் பாண்டிச்சேரியிலேயே முகாம் செய்து, இந்தியப் புரட்சி வீரர்களின் நடவடிக்கைகளை அன்றாடம் கவனித்து வந்தனர்.
வ.வே.சு.ஐயர் வந்து சேர்ந்த பின்னர் பாண்டிச்சேரியில் இருந்த தேசியவாதிகளின் நடவடிக்கைகளில் சூடுபிடித்தது. ஐயர் பல இளைஞர்களைத் திரட்டி, தேசபக்தியூட்டும் சொற்பொழிவுகளை ஆற்றியதோடு, உடற்பயிற்சி, துப்பாக்கி சுடும் பயிற்சி ஆகியவற்றையும் அளித்து வந்தார். பாரதியாரின் உணர்ச்சிமிக்க தேசபக்திப் பாடல்களும் இதற்குப் பெரும் துணையாக இருந்தன.
இந்தப் பத்திரிக்கைகள் அனைத்தையும் நீலகண்ட பிரம்மச்சாரி மூலம் பெற்றுப் படித்து வந்த வாஞ்சிநாதன், ஆஷ் துரையை தீர்த்துக் கட்டும் தன் திட்டத்திற்குப் பாண்டிச்சேரிக்குப் போனால் உதவியும் உரிய ஆலோசனையும் கிடைக்கும் என்று எண்ணினான்.
1911 ஜனவரி 9ஆம் தேதியன்று பாண்டிச்சேரிக்குப் புறப்பட்டுச் சென்ற வாஞ்சிநாதன், பாண்டிச்சேரி தர்மராஜா கோயில் தெருவில் பாரதியாரும் அவரது நண்பர்களும் தங்கியிருக்கும் ‘தருமாலயம்’ என்ற வீட்டை அடைந்தான். அவனை பாரதியாரும் வ.வே.சு. அய்யரும் அன்போடு வரவேற்றனர். வாஞ்சிநாதன் சுமார் ஒருவார காலம் தருமாலயத்தில் தங்கியிருந்தான். அந்த ஒருவார காலத்தில் வ.வே.சு.அய்யர் வாஞ்சிநாதனுக்கு உலகின் பல நாட்டுப் புரட்சி வீரர்களைப் பற்றியும் புரட்சி இயக்கங்களைப் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். வாஞ்சிநாதனின் இலட்சியத்தை நிறைவேற்றும் வழிமுறைகளையும் போதித்தார். அதனால், முழு திருப்தியடைந்த வாஞ்சிநாதன் தன் சொந்த ஊரான செங்கோட்டைக்குச் சென்று சில ஏற்பாடுகளை முடித்துக்கொண்டு வருவதாக வ.வே.சு.அய்யரிடம் கூறிவிட்டு செங்கோட்டைக்குப் புறப்பட்டான்.
வ.வே.சு.அய்யர் தினசரி வாஞ்சிநாதனுக்குப் புரட்சிக் கல்வியைப் போதித்து வந்தார். வாஞ்சிக்கு துப்பாக்கிச் சுடும் பயிற்சி அளிக்கும் பொறுப்பை நாகசாமியிடம் ஒப்படைத்தார் வ.வே.சு.அய்யர். நாகசாமி தருமாலயம் விடுதியில் தங்கி ‘தருமம்’ பத்திரிக்கையின் பொறுப்பைக் கவனித்து வந்தார்.
பிரான்சிலிருந்து மேடம் காமா அனுப்பியிருந்த ஒரு ப்ரௌனிங்க பிஸ்டலை வைத்து நாகசாமி தினசரி அதிகாலை வேளையில் வாஞ்சிநாதனை பாண்டிச்சேரிக்கு அருகிலுள்ள கரடிக்குப்பம் ஓடை வெள்ளவாரிப் பள்ளத்தாக்கிற்கு அழைத்துச் சென்று துப்பாக்கிச் சுடும் பயிற்சியை அளித்து வந்தார். வ.வே.சு.அய்யரும் சில நாட்கள் பயிற்சியளித்தார். வாஞ்சிநாதன் குறி தவறாமலும், கை நடுங்காமலும் இலக்கை நோக்கிச் சுடும் பயிற்சியை மிக விரைவில் பெற்றான். 15 நாட்களுக்குள் கைதேர்ந்த வேட்டைக்காரனைப்போல சுடும் திறனைப் பெற்றான்.
அக்காலத்தில் அரவிந்தர் பாண்டிச்சேரியில் இருந்தாலும், தனி மனிதன் ஆத்ம சக்தியை வளர்த்துக் கொண்டால்தான் தேச சேவையில் ஈடுபட முடியும் என்று கருதி, அதைப் பெறும் வரை அரசியல் பணிகளில் ஈடுபட வேண்டாம் என்று ஒதுங்கியிருந்ததால், வாஞ்சிநாதன் செய்ய விரும்பிய செயலைப் பற்றி அவரிடம் யாரும் கூறிவில்லை.
பாரதியார் தீவிரவாதியாக இருந்தாலும் பலாத்காரச் செயல்களில் இறங்குவதை அவ்வளவாக விரும்பாதவர். மேலும் இரகசியத்தைக் காப்பாற்ற அவரால் முடியாது. அதனால் வாஞ்சிநாதனின் விவகாரம் பாரதியாருக்கும் தெரியாமல் மறைக்கப்பட்டு விட்டது. அவர் வழக்கம்போல வாஞ்சிநாதனுக்குத் தன் கவிதைகளைப் பாடி காண்பிப்பதோடு நின்றார்.
மண்டயம் எஸ்.சீனிவாசாச்சாரியார் எதற்கும் துணிந்தவர். அவர்தான் செலவுக்கு அவ்வப்போது பணம் கொடுத்து வந்தார். வ.வே.சு.அய்யர், சீனிவாசாச்சாரியார், நாகசாமி ஆகிய மூவருக்கு மட்டும் வாஞ்சிநாதனின் திட்டம் முழுமையாகத் தெரியும்.
வாஞ்சிநாதன் திருநெல்வேலிக்குப் புறப்பட வேண்டிய நாள் நெருங்கிக் கொண்டே வந்தது. ‘ஆரியர் கடமை’ என்ற தலைப்பிட்ட ஒரு துண்டுப் பிரசுரமும் தயாரிக்கப்பட்டது. துப்பாக்கித் தயார். துண்டுப் பிரசுரமும் தயார்!
1908ஆம் ஆண்டில் வ.உ.சி., சுப்பிரமணிய சிவா ஆகியோரைக் கைது செய்து, வழக்குப் போட காரணகர்த்தாவாக விளங்கி ஆஷ் துரை என்பவன் முதலில் துணை கலெக்டராக இருந்தான். 1909ஆம் ஆண்டில் கலெக்டர் விஞ்ச் துரை ரிட்டயர்டு ஆனதும் மாக்வீர் என்பவர் சில காலமும், டேவிட்சன் என்பவர் சில காலமும் ஆக்டிங் கலெக்டராகப் பணியாற்றினர். 1910இல் இப்பதவியில் துணைக் கலெக்டரான ஆஷ் துரையே நியமிக்கப்பட்டான். இராபர்ட் வில்லியம் டி எஸ்காரட் ஆஷ் என்ற முழுப்பெயர் கொண்ட அவன் ஐ.சி.எஸ் பட்டதாரியும் கூட.
இவன் இந்திய மக்களை மிருகங்களைவிடக் கேவலமாக மதிக்கும் மனப்போக்கைக் கொண்டவன். தேசபக்தர்களை தேவையில்லாமல் கைது செய்து வழக்குப்போட்டு துன்புறுத்தினான். தேசப்பற்று மிக்க மக்கள் கூட்டங்களின் மீது அனாவசியமாக துப்பாக்கிச் சூடுகளை நடத்தினான். அதை எதிர்த்த கிராம மக்களை ரிசர்வ் போலீஸ் படையை ஏவி அடக்கி ஒடுக்கியதோடு, அந்தப் போலீஸ் படையின் செலவை சம்பந்தப்பட்ட கிராம மக்களிடமே தண்டத் தீர்வையாகவும் வசூலித்தான். இப்படிப்பட்ட கொடுமையாளனுக்கு ஆங்கில அரசு மாவட்டக் கலெக்டர் பொறுப்பை அளித்து கௌரவித்தது. இது நெல்லை மாவட்ட தேசபக்தர்களுக்கு வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சியதுபோல இருந்தது.
‘கலெக்டர் ஆஷ் தன் மனைவியோடு திருநெல்வேலி இரயில்வே சந்திப்பிலிருந்து காலை 10 மணிக்குப் புறப்பட்டு 10.45 மணிக்கு மணியாச்சி சந்திப்பில் இறங்குகிறான்; 10.30 மணிக்கு தூத்துக்குடியிலிருந்து புறப்பட்டு 11 மணிக்கு மணியாச்சியை வந்து அடையும் எக்ஸ்பிரஸ் இரயிலில் ஏறி கொடைக்கானல் பயணத்தைத் தொடருகிறான் என்ற முழு விவரங்களையும் துல்லியமாகத் தெரிந்துகொண்ட வாஞ்சிநாதன் தன் மனத்துக்குள்ளேயே திட்டம் தீட்டினான். அதன்படி அறிக்கை சகிதமாக காலை 10 மணிக்கே திருநெல்வேலி இரயில் நிலையத்தை அடைந்தான் வாஞ்சிநாதன். கலெக்டர் ஆஷ் தம்பதிகள் ஏறிய அதே இரயிலில் தானும் ஏறி 10.45 மணிக்கு மணியாச்சியை அடைந்தான்.
கோடைக்கு இதம் தேடி கொடைக்கானலுக்குப் பயணம் செல்லும் கொடுங்கோலன் ஆஷ் மேற்கொள்ளும் உல்லாசப் பயணத்தை, உயிர் பிரியும் இறுதிப் பயணமாக்கிவிட வேண்டும் என்ற உறுதியோடு, இரையைத் தேடி அலையும் வேங்கையாய் மணியாச்சி இரயில் நிலைய பிளாட்பாரத்தில் இறங்கி உலவிக் கொண்டிருந்தான் வாஞ்சிநாதன்.
அவன் பார்வையெல்லாம் கொடைக்கானல் செல்ல இருக்கும் இரயிலில் முதல் வகுப்பு பெட்டியில் அமர்ந்துள்ள கலெக்டர் ஆஷ் துரையின் மீதே பதிந்திருந்தது. ஏகாந்தமாக தனி முதல் வகுப்புப் பெட்டியில் எதிரும் புதிருமாக அமர்ந்து, அடுத்த பிளாட்பாரத்தில் வந்து நின்ற தூத்துக்குடி போட்மெயிலில் ஏறுவதற்காக மூட்டை முடிச்சுகளோடு ஓடிக்கொண்டிருந்த மக்களைப் பார்த்து ஏளனச் சிரிப்பைச் சிந்திக் கொண்டிருந்த ஆஷ், அதுதான் தன் கடைசிச் சிரிப்பு என்பதைக் கண்டானா என்ன?
கொடைக்கானல் இரயில் புறப்பட ஐந்து நிமிடங்கள்தான் இருந்தன. கலெக்டர் ஆஷ் ஏதோ ஓர் ஆங்கிலச் செய்தித்தாளைப் புரட்டிக் கொண்டிருந்தான். அப்போது காக்கி மேல் சட்டையும், காக்கிக் கால் சட்டையும் அணிந்திருந்த வாஞ்சிநாதன் கொடைக்கானல் இரயிலில் பாய்ந்து ஏறி, கலெக்டர் ஆஷ் அமர்ந்திருந்த முதல் வகுப்புப் பெட்டிக்குள் மின்னலெனப் பாய்ந்தான். கையில் மின்னிக் கொண்டிருந்த பிரௌனிங் பிஸ்டலின் சுடும் விசையைத் தட்டிவிட்டு கலெக்டர் ஆஷ் மார்பைக் குறிவைத்து மூன்றுமுறை சுட்டான் வாஞ்சிநாதன்.
கலெக்டர் ஆஷ் பிணமாகி விட்டான்; இனிமேல் பிழைக்கவே மாட்டான் என்பது உறுதியாய் தெரிந்த பின்னரே வாஞ்சிநாதன் அந்த இரயில் பெட்டியை விட்டிறங்கி, பிளாட்பாரத்தில் ஓடத் தொடங்கினான். தன்னைப் பிடிக்க பின்தொடர்ந்த கலெக்டரின் சேவகன் ஒருவனையும் சில போலீஸ்காரர்களையும் தன் கையில் மின்னிய பிஸ்டலைக் காட்டி எச்சரித்தான் வாஞ்சி.
‘வெள்ளை நாய்களைச் சுடுவதுதான் என் இலட்சியம். வீணாக என்னைப் பின் தொடர்ந்தால் விண்ணுலகுக்கு டிக்கெட் கொடுத்து உங்களையும் அனுப்பி விடுவேன்!’ என்று முழங்கிய வீரவாஞ்சியை அதன் பின்னர் எவனும் பின் தொடரவில்லை.
பிளாட்பாரத்தில் ஓடிய வாஞ்சிநாதன் தான் கொண்டு வந்த துண்டு நோட்டீஸ் கட்டை அவிழ்த்துப் பறக்கவிட்டவாறே பிளாட்பாரத்தின் முடிவில் இருந்த ஒரு கழிப்பறைக்குள் புகுந்தான். அடுத்த சில விநாடிகளுக்குள் கழிப்பறையிலிருந்து ‘டுமீல் டுமீல்’ என்று இரண்டு குண்டுகள் வெடித்த சத்தம் கேட்டது.
ஆம்; தப்பிச் செல்ல மார்க்கமிருந்தும், தான் பிடிபட்டு தன் தோழர்களைக் காட்டிக் கொடுக்க நேரக்கூடாது என்று கருதியதால் வாய்க்குள் பிஸ்டலை வைத்துச் சுட்டு, தன்னைத்தானே மாய்த்துக் கொண்டான் வீர வாஞ்சிநாதன்.
ஆனாலும் அந்தக் கழிப்பறைக்குள் நுழைய அடுத்த ஒரு மணி நேரத்திற்கு எந்த போலீஸ்காரனுக்கும் தைரியம் பிறக்கவில்லை. நீண்ட நேரம் கழித்தே தயங்கித் தயங்கி உள்ளே நுழைந்து வேட்டையாடப்பட்ட வேங்கைபோல் வீழ்ந்துகிடந்த வாஞ்சியின் உயிரற்ற உடலைக் கைப்பற்றினர் போலீசார். வாய்க்குள் துப்பாக்கியை நுழைந்துச் சுட்டதால் வாஞ்சியின் தலை சுக்குநூறாகச் சிதறிக் கிடந்தது. வாஞ்சிநாதனின் சட்டைப் பையில் அவர் கைப்பட எழுதிய ஒரு கடிதமும், மேடம் காமாவின் ‘வந்தே மாதரம்’ பத்திரிக்கையிலிருந்து கிழித்தெடுக்கப்பட்ட ஒரு பக்கமும் இருந்தன.
கடிதத்தில் ஆஷை சுட்டது ஏன் என்பதை வாஞ்சிநாதன் விளக்கியிருந்தான்:
“அசோக சக்கரவர்த்தி முடிசூடி அரசோச்சிய பாரத மண்ணில், ஐந்தாம் ஜார்ஜ் மன்னன் முடிசூட்டி விழா நடத்துவதற்காக வர இருக்கும் இந்த வேளையில், அவரது ஆட்சியின் சின்னமான நெல்லை மாவட்ட ஆட்சியாளன் கொடுங்கோலன் ஆஷை சுட்டுப் பொசுக்கிப் பிணமாக்குகிறேன்! புண்ணிய பாரத பூமியை அடிமைப்படுத்தி அடக்கி ஆள என்னும் மிலேச்சர்களுக்கு என்ன கதி ஏற்படும் என்பதை உணர்த்தவே நான் சுட்டேன்!
பாரத அன்னைக்கு என் எளிய காணிக்கையாக என் உயிரையும் அர்ப்பணிக்கிறேன். இதற்கு நானே முழுப்பொறுப்பு!
என்று விவரித்திருந்தான் வாஞ்சிநாதன்.
நன்றி: சிவலை இளமதி
ஆதாரம்: சரித்திரத்தை மாற்றிய சதிவழக்குகள்
1 comments:
ஒரு மனிதன் தன் நாட்டுக்காக வாழ்வதென்றால் வாஞ்சிநாதன் போல் வாழ வேண்டும். அதைவிட்டுட்டு இந்தியா என் தாய் நாடு, எல்லாரும் என் சகோதர, சகோதரிகள் என வாயால் மட்டும் சொல்லிக்கொண்டிருப்பது எந்தக்காலத்திலும் வேலைக்காவாது. ம்ம் என்ன பண்றது எல்லாம் நமது அரசியல்வாதிகள் நம்மவர்களுக்கு கற்றுக்கொடுப்பது. நம்மவர்கள் சுயமாய் சிந்திக்க ஆரம்பித்தால் மெல்ல மெல்ல பலகோடி வாஞ்சிநாதன்கள் உருவாகி இந்தியா புதியஇந்தியாவாக மாற்றமடையும்.
கருத்துரையிடுக