சனி, 10 செப்டம்பர், 2011

இப்படியும் சில மனிதர்கள் - 2

“நான் வித்யாதரன். சுருக்கமா வித்யா.

“நான் தேவலோஷினி. சுருக்கமா தேவா.

இப்படித்தான் அறிமுகம் ஆனார்கள் இருவரும். கொஞ்சநாள் நேரில் பேச்சு. கொஞ்சநாள் செல்லில் பேச்சு என்று தொடர்ந்தது நட்பு. எதிர்பார்த்தபடியே காதலும் ஆனது.

“நீ எப்படி உங்கள வீட்டுல சொல்வ? நானோ வசதியில்லாதவன். நீயோ எல்லாம் இருக்கறவ. அவங்க ஏத்துக்குவாங்களா?”

“எல்லாம் என்னோட வினாயகர் பாத்துப்பார் நம்பிக்கையுடன் சொல்வாள் தேவா.

“வித்யா. நம்ம பேர் பொருத்தம் பாத்தியா. எனக்கு சுருக்குனா ஆண் பேர் மாதிரி இருக்கு. உனக்கு சுருக்குனா பெண் பேர் மாதிரி இருக்கு. கூப்பிடறதுக்கே நல்லா இருக்கு இல்ல. நம்மள பாத்து மத்தவங்க எதுல பொறாமைப் படறாங்களோ இல்லியோ நம்ம பேருக்காகவே பொறாமைப் படுவாங்க என்றாள் அவன் மேல் சாய்ந்துகொண்டே.

“ஆமா. பேர் கூப்பிட்டு பேசும்போது பிரண்ட்ஸ் கூட பேசுற ஃபீலிங்ஸ் போல ரொம்ப அந்நியோன்யமாதான் இருக்கும் அவனும் ஆமோதித்தான்.

திடீரென்று ஒருநாள் வந்தாள். “எனக்கு மாப்பிள்ளை பாக்க ஆரம்பிச்சாச்சு வித்யா. ஏதாவது பண்ணு

“என்ன பண்றது. எனக்கு கொஞ்சம் டைம் வேணும். உனக்கேத் தெரியுமில்ல. எங்க அண்ணனுக்கு கல்யாணம் முடிஞ்சாதான் நம்ம கல்யாணத்தைப் பத்தி உங்க குடும்பத்துல வந்து பேசவே முடியும்.

“என்ன கழட்டி விடணும்னு நெனக்கிறியா? என்று சந்தேகத்துடன் கேட்டாள் தேவா.

“என்ன இப்படி பேசறே. அப்படியெல்லாம் நெனச்சிருந்தா நீ போன் பண்றப்பல்லாம் எடுப்பேனா?

“அப்ப ஒன்னு பண்ணு. சீக்கிரம் இதைவிட நல்ல வேலைக்கு டிரை பண்ணு. உங்க அண்ணன் கல்யாணத்தை முடி. இப்ப குடியிருக்கிற வீட்ட கொஞ்சம் ஆல்டர் பண்ணி முடிஞ்சா கான்கிரீட்டால ஒட்டுப்போடு. அப்பதான எங்க வீட்டு நான் கொஞ்சம் தைரியமா பேசமுடியும்.

“இதெல்லாம் பண்ணனும்னா எனக்கு இரண்டு, மூணு வருஷமாவது டைம் வேண்டும்” என்றான் அவன்.

அவளும் முடிந்தவரை சமாளித்துக் கொள்வதாக வாக்களித்தாள்.

மூன்று வருடம் ஓடியது. ஒரு கல்யாணத்தில் இருவரும் சந்திக்க வாய்ப்பு நேர்ந்தது.

“ஹாய். நான் வித்யாதரன். சுருக்கமா வித்யா. இது என் மனைவி கிருஷ்ணவேணி. சுருக்கமா கிருஷ்ணா – அவளின் கணவனிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

“ஹாய். நான் ராதாகிருஷ்ணன். சுருக்கமா ராதா. இது என் மனைவி தேவலோஷினி. சுருக்கமா தேவா – அவனும் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டான். பேசிக்கொண்டிருந்துவிட்டு விடைபெற்றார்கள்.

“நம்பள மாதிரி அவங்க ரெண்டு பேரோட பேரும் ஆண், பெண் மாறி இருக்குல்ல – வார்த்தை மாறாமல் தன் துணையிடம் சொல்லிக்கொண்டே சென்றார்கள் வார்த்தை மாறி பேசத்தெரியாத இருவரும்.

1 comments:

Kannan சொன்னது…

நல்ல கதை.

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com