
உங்களால் ஏற்றுக் கொள்ள முடிகிறதா? என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்கு இவ்வளவு பெரிய கட்டுரை தேவையில்லைதான். இதில் பாடிய யாருக்கும் என்னையும் தெரியாது. அவர்களையும் எனக்குத் தெரியாது. நான் சொல்வது விஜய் தொலைக்காட்சியில் நடந்த ‘சூப்பர் சிங்கர்’ என்ற நிகழ்ச்சியின் இறுதிபோட்டியைப் பற்றியது. இதுவரை நடந்த பல இறுதி போட்டிகளில் ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்தாலும் எனக்கென்னவோ தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் சரியானவர் என்றே தோன்றியது. அதிலும் சென்ற முறை ‘ஜூனியர் சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில் அல்கா அஜீத் என்பவர் வென்றபோது தமிழர்களுக்கான தேடல் என்று சொல்லிவிட்டு தொடர்ந்து மலையாளிகளையே தேர்ந்தெடுக்கிறார்கள் என்ற விமர்சனம் வந்தது.
அப்போது கூட என்னால் ஏற்றுக்கொள்ள முடிந்தது. ஏனென்றால் அல்கா அஜீத் இறுதிப் போட்டியில் பாடிய ‘சிங்கார வேலனே தேவா...’ என்ற பாடல் அவ்வளவு அருமையாக இருந்தது. ஆனால் 23.09.2011 அன்று நடந்த ‘சூப்பர் சிங்கர் 3’ இறுதிப்போட்டியின் முடிவுகள் நியாயமாக இருந்ததா என்பதுதான் யோசிக்க வைக்கிறது.
எனக்கு இசைஞானம் இல்லைதான். அதற்காக ‘ஜெய் ஹோ’ என்ற பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் விருது வென்றபோது அதைவிட பல நல்ல பாடல்கள் தமிழிலேயே இருக்கிறது. அதற்கு ஏன் ஆஸ்கர் விருது கொடுக்கவில்லை?’ என்று கேட்கும் சிலரைப்போல் தற்குறி இல்லை. கேள்வி ஞானம் உண்டு. என்னைப் பொறுத்தவரை சத்யபிரகாஷ் என்பவர்தான் வெல்வார் என்று ஆரம்பத்திலிருந்தே எண்ணியிருந்தேன். அவர் பாடியதைப் பார்ப்பவர்கள் அனைவரும் இவ்வாறுதான் எண்ணியிருப்பார்கள். சாய்சரண்தான் வென்றவர் என்று அறிவித்தவுடன் ஒருவேளை நமது கணிப்புதான் தவறோ என்று நினைத்தேன். ஆனால் இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் அவர்கள் அதே மேடையிலேயே இன்று பாடியவர்களில் எனக்கு மிகவும் பிடித்தவர் என்று சத்யபிரகாஷ் என்பவரை அறிவித்தவுடன் எனது ஐயம் தீர்ந்தது.

அது மட்டுமில்லாமல் அனைவரும் பாடி முடித்தவுடன் அவரவருக்கு வாக்கு கேட்கும்போது என் பாட்டு உங்களுக்குப் பிடித்திருந்தால் இந்த எண்ணுக்கு வாக்களியுங்கள் என்று கேட்டனர். ஆனால் வென்ற சாய்சரண் மட்டும் நான் மூன்று வருடமாக இதற்காக கஷ்டப்படுகிறேன். என் கனவை நிறைவேற்றுங்கள் என்று ஏறக்குறைய செண்டிமெண்ட் எனப்படும் அனுதாப வாக்குகளை குறிவைத்தே காய் நகர்த்திக் கொண்டிருந்தார்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் எனக்கு பலவித ஐயங்கள் தோன்றுகின்றன. பொதுவாக ஒரு பாடகரை தேர்ந்தெடுக்கும்போது மக்கள் ஓட்டுக்களை வைத்து எப்படி தேர்ந்தெடுக்கிறார்கள்? மக்கள் உண்மையிலேயே இசைஞானத்துடன் வாக்களிப்பார்களா? மக்கள் விரும்பிய பல பாடல்கள் நீண்டகாலம் நிலைக்காமல் போனதும் உண்டு. மக்கள் ஒதுக்கிய பல பாடல்கள் இசை அறிந்தவர்களால் தூக்கி வைத்து கொண்டாடப் பட்டதும் உண்டு. அதனால் இறுதித் தீர்ப்பில் ஏற்படும் இதுபோன்ற கண்டனங்களை சமாளித்துக் கொள்வதற்காக மக்கள் வாக்குகளை ஒரு கேடயமாக விஜய் தொலைக்காட்சி பயன்படுத்திக் கொண்டதோ என்ற ஐயம் எனக்கு எழுகிறது.
முதல் சுற்றுப் பாடலாகட்டும், இரண்டாவது சுற்றுப் பாடல்களாகட்டும், இரண்டிலுமே சத்யபிரகாஷ் சாய்சரணைவிட அருமையாகவேப் பாடினார் என்பது எனக்கு தெரிந்தவர்கள் அனைவருமே சொன்னது. அதுவும் சாய்சரண் பாடிய ‘மழைத்துளி மழைத்துளி’ பாடலைவிட சத்யபிரகாஷ் பாடிய ‘ஓமணப் பெண்ணே!’ கூட்டத்தால் மிகவும் அருமையாக இரசிக்கப்பட்டது. அதுபோல் சந்தோஷ் பாடிய ‘தீயில் விழுந்த’ பாடலும் மிகுந்த உணர்வுப் பூர்வமாக இருந்தது. இப்படி இருந்தும் எப்படி சாய்சரண் வென்றிருப்பார் என்பதை விஜய் தொலைக்காட்சிதான் விளக்க வேண்டும்.
இந்த விடயத்திற்கெல்லாம் இவ்வளவு பெரிய பதிவு தேவையில்லைதான். ஆனால் திறமையைக் கண்டுபிடிக்கிறோம் என்று கூறிக்கொண்டு தேவையில்லாமல் திறமைசாலிகளை அவமானப்படுத்த வேண்டாமே என்றுதான் எழுதுகிறேன். என்னைப் பொறுத்தவரை முதலிடம் சத்யபிரகாஷ், இரண்டாம் இடம் சந்தோஷ். அதற்கு அடுத்த இடம்தான் சாய்சரண். இது முழுக்க முழுக்க என் தனிப்பட்ட கருத்து மட்டுமே.
3 comments:
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால்.. எங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் சாய்சரண் பாடியது சத்திய பிரகாஷை விட ரொம்ப பிடித்து இருந்தது. அவர் வெல்ல வேண்டும் என்று மனதார விரும்பினோம்.
i agree your article
உங்கள் பதிவுக்கு நன்றி....
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
கருத்துரையிடுக