நேற்று ஒரத்தூர் சென்றபோது அங்கு உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் தேசிய முற்போக்குத் திராவிடர் கழகம் கட்சி சார்பில் செய்யப்பட்ட பிரச்சாரத்திலிருந்து சில வரிகள், ‘அன்புடைய மக்களே! நாட்டின் விலைவாசி குறைந்திட, உங்கள் கேப்டன் முதல்வர் பதவியில் அமர்ந்து ஊழலில்லா ஆட்சி வழங்கிட, உங்கள் பொன்னான வாக்குகளை தேசிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் ****** அவர்களுக்கு முரசு சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமாய் உங்கள் பாதம் பணிந்து கேட்டுக் கொள்கிறோம்” – இவர்களுக்கு அவர்களின் கட்சியின் பெயரே தெரியவில்லை. இந்த தேர்தலில் ஜெயித்தால் எப்படி கேப்டன் முதல்வர் ஆவார் என்பதும் தெரியவில்லை. இப்படித்தான சிலநாட்கள் முன்பு கேப்டனும் என்னிடம் ஒருமுறை ஆட்சியைத் தந்து பாருங்கள் என்று கூறினார். நல்ல தலைவர்... நல்ல தொண்டர்கள்... தலைவர் அவர்கள் தொண்டர்களுக்கு கட்சியினைப் பற்றியும் அதன் கொள்கைகள் பற்றியும் விளக்கமளித்து பின்பு பிரச்சாரத்திற்கு அனுப்பினால் நலம். இல்லையேல் இப்படித்தான் ஆகும். மக்களைப் பொறுத்தவரை கட்சிகள் எல்லாம் தி.மு.க. என்று முடிய வேண்டும் என்று நினைக்கிறார்கள் போலிருக்கிறது. தி.மு.க., அ.தி.மு.க.வைத் தொடர்ந்து தே.தி.மு.க. என தே.மு.தி.க.வை இவர்களே மாற்றிவிட்டார்கள்.
******************************************
தமிழ் திரையில் இப்போது தேடல் அதிகம் தொடங்கிவிட்டது என்று நினைக்கிறேன். வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், பாரதி என தெரிந்த முகங்களை படங்களாக அக்காலத்தில் தந்தார்கள் என்றால் அரவான், 7ம் அறிவு, வாகை சூடவா, மதராசப்பட்டினம் என வரலாற்றை பின்னோக்கிப் பார்க்கும் படங்கள் வர ஆரம்பித்திருக்கின்றன. இந்த வளர்ச்சி ஆரோக்கியமான பாதையில் தமிழ் திரையுலகை திருப்பினால் நன்று.
******************************************
அறிவிக்கப்படாத மின்வெட்டுதான் ஆளும்கட்சிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கப் போகிறது என்று நினைக்கிறேன். ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் நிறுத்துவது மட்டுமின்றி அவ்வப்போது மின்சாரம் நின்று பத்து நிமிடம் வரை கழித்து வருகிறது. தென்மாவட்டங்களின் நிலையை நண்பர்கள் வழி கேள்விப்படும் போது வடமாவட்டங்களில் நிலைமை பரவாயில்லை என்றே தோன்றுகிறது. அத்தியாவசியமான மின்சாரத்தில் அலட்சியம் காட்டாமல் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது மிகவும் அவசியம். அதைவிடுத்து இலவசங்கள் வழங்குவதில் சென்ற அரசு போலவே அக்கறைக் காட்டிக் கொண்டிருந்தால் ஐந்து வருடங்கள் கழித்து ஆளும்கட்சியும் பாடம் கற்க வேண்டி வரலாம். எது எப்படியாயினும் மக்கள் வெறுப்பில் ஒருவரை மாற்றி ஒருவரை தேர்ந்தெடுத்து விட்டு புலம்புவதைத் தவிர வேறு வழியில்லை.
******************************************
குழந்தை வளர்ப்பு என்பது உண்மையிலேயே ஒரு கலை. குழந்தையின் அழுகையை வைத்தே எதற்காக அழுகிறான்(ள்) என்பதை கண்டுபிடிப்பது ஒரு மிகப்பெரிய விடயம். குழந்தைக்கு சொல்லத் தெரியாது. அதன் தேவைகளை அறிந்து செயது கொடுப்பது வேறு எதிலும் கிடைக்காத ஒரு உச்சி ஆனந்தம். பெண்கள் இயல்பாகவே குழந்தையுடன் ஒன்றி விடுவார்கள். குழந்தைகளும் அம்மாவிடம் ஒட்டிக் கொண்டு விடும். ஆணுக்கு எனக்குத் தெரிந்து சகிப்புத் தன்மை கொஞ்சம் குறைவுதான். அதனை கொஞ்சம் அதிகரித்து விட்டால் பெண்ணை விட ஆணிடம் அனைத்துக் குழந்தைகளும் எளிதாக ஒட்டிக் கொண்டு விடும். உலகத்தின் அத்தனை துன்பங்களையும் மறக்கடிக்கும் மருந்து குழந்தையின் சிரிப்பில் மட்டுமே இருக்கிறது.
******************************************
0 comments:
கருத்துரையிடுக