செவ்வாய், 18 அக்டோபர், 2011

நொறுக்குத் தீனி - 18.10.2011

பாண்டிச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த பாகூர் கொம்யூன் பஞ்சாயத்தில் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வாங்க சென்றிருந்தேன். சான்றிதழுக்கு உண்டான பணத்தை தவிர ஒரு பைசா கூட கூடுதலாக அவர்கள் கேட்டு பெறவில்லை. மேலும் சிலர் கொடுக்க முயன்றபோதும் கூட வேண்டாம் என்று மறுத்துவிட்டனர். அதுபோலவே சான்றிதழ் எனக்கு வந்துசேர நாளாகி விட்டது. அதைப்பற்றி விசாரிக்க சனிக்கிழமையன்று மீண்டும் சென்றேன். அன்று விடுமுறை என்பதால் என்னுடைய தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டு காரணத்தை திங்களன்று காலையே எனக்கு தொலைபேசி மூலம் தெரிவித்தார்கள். அதற்கும் ஏதும் கூடுதலாக பணம் பெறவில்லை. இப்படி ஒரு சிறந்த அரசு அலுவலகத்தை பார்ப்பதற்கு பெருமையாக இருக்கிறது..

+++++++++++++++++++++++++


சேத்தியாத்தோப்பு பேரூராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நான்கு பேரில் அ.தி.மு.க. வேட்பாளர் திரு.கே.பி.டி.இளஞ்செழியன் பல சுற்று பிரச்சாரம் செய்ததை பார்க்க முடிந்தது. அதற்கடுத்து தி.மு.க.வேட்பாளர் திரு.மனோகரன் அவர்கள் பிரச்சாரம் செய்தார். தே.மு.தி.க.வேட்பாளர் திரு.மதிவாணன் அவர்கள் கடைசி நாள் மட்டுமே நேரடிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மற்ற நாட்களில் அவரைப் பிரச்சாரத்தில் பார்க்க முடியவில்லை. அதுபோலவே காங்கிரஸில் போட்டியிடும் வேட்பாளர் பெயரும் தெரியவில்லை. கடைசி வரை அவரைப் பார்க்கவும் முடியவில்லை.

+++++++++++++++++++++++++


உள்ளாட்சித் தேர்தல் 17 மற்றும் 19 ஆகிய இரு தேதிகளில் நடைபெறுவதால் பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் நடக்கவில்லை. நேற்று (17.10.2011) தேர்தல் பணிக்கு தே.கோ.ம. மேல்நிலைப் பள்ளியிலிருந்து பெரும்பாலான ஆசிரியர்கள் சென்றுவிட்டதால் மாணவர்கள் வெளியில் அலைந்ததை பார்க்க முடிந்தது. ஏற்கனவே சமச்சீர் கல்வி பிரச்சனையால் தாமதமாக தொடங்கிய பள்ளி மாணவர்களுக்கு இவ்வாரம் முழுக்க பெரும்பாலும் வகுப்புகள் நடக்காது. எப்படியும் பெரும்பாலானோருக்கு நாளையும் (19.10.2011) தேர்தல் பணி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் 21.10.2011 அன்று வாக்கு எண்ணிக்கைக்கும் செல்ல வேண்டியிருப்பதால் மாணவர்களுக்கு மேலும் ஒரு வாரம் இன்னல்தான். தேர்தல் ஆணையம் இதனை ஒழுங்கு படுத்தி 17ம் தேதி தேர்தல் நடக்கும் ஊர்களில் உள்ள ஆசிரியர்களை இடம் மாற்றி போட்டிருக்கலாம். அவசர அவசரமாக அறிவித்ததால் அவர்களுக்கு நேரமில்லையோ என்னவோ?

+++++++++++++++++++++++++


திரைக்கதை நன்றாக இருந்தால் எந்த கதையும் வெற்றி பெறலாம் என்பதற்கு எங்கேயும் எப்போதும் படம் ஒரு சான்று. விபத்தை முன்கூட்டியே காட்டிவிட்டதால் அதன் உச்சக்காட்சி (கிளைமாக்ஸ்) ஏற்க்குறைய பெரும்பாலானோரால் யூகிக்க கூடியதே. இருந்தும் படம் வெற்றி பெற்றதற்கு காரணம் எடுத்திருக்கும் விதம்தான்.

+++++++++++++++++++++++++