கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் நெஞ்சுவலி என்று சிகிச்சைக்காக வந்தவரை மருத்துவர்கள் உடனே கவனிக்காததால் மருத்துவமனை அடித்து நொறுக்கப்பட்டது என்ற தகவல் வந்தது. அங்குள்ள மருத்துவர்கள் உண்மையிலேயே காலத்தில் கவனிக்காமல் அலட்சியப்படுத்துகிறார்கள் என்று எனக்கும் தோன்றுகிறது. கடலூருக்கு 16.03.2011ல் இரு சக்கர வாகனத்தில் சென்ற நான் ஆலப்பாக்கம் அருகே வேகமாக வந்த சரக்குந்தின் மீது மோதாமல் இருப்பதற்காக வண்டியில் இருந்து வயலில் குதித்தேன் அதில் என் காலின் சதை கிழிந்து எலும்பு வெளியே தெரிந்தது. உடனே அங்கிருந்து 108க்கு அழைத்து ஆம்புலன்ஸில் கடலூர் வந்து சேர்ந்தேன். நான் அரசு மருத்துவமனைக்கு வந்து ஏறக்குறைய அரை மணி நேரம் வரை என்னை உட்கார வைத்திருந்தார்கள். யாரும் வந்து பார்க்கவில்லை. காலில் இருந்தும், தலையில் இருந்தும் இரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. நான் சிறிது தன்னம்பிக்கையுடன் இருந்ததால் எனக்கு மயக்கம் ஏதும் வரவில்லை. அரைமணி நேரம் கழித்து மருத்துவர் வந்து பார்த்துவிட்டு உதவியாளரை காலில் தையல் போடச்சொல்லி விட்டு சென்றுவிட்டார். அவரோ, என்னை மனிதன் என்றும் பார்க்காமல் ஏதோ மிருகத்தை கையாள்வதுபோல் வெகு வெகு அலட்சியமாக காலில் 9 தையல்கள் போட்டார். பிறகு அங்கிருந்து என்னை படுக்கைக்கு மாற்றினார்கள். அதிலிருந்து சுமார் ஒரு மணி நேரம் கழித்து ஒரு செவிலியர் வந்து ஊசி போட்டு விட்டு தலையை ஸ்கேன் எடுத்து வரச்சொன்னார். ஸ்கேன் எடுக்க என்னை தள்ளிச்சென்ற பணியாளர் நூறு ரூபாயை வாங்கிக் கொண்ட பிறகே ஒழுங்காக தன் வேலையை செய்தார். ஸ்கேன் எடுத்து முடித்த பிறகு சுமார் 2 மணி நேரம் கழித்து ஒரு மருத்துவர் வந்து பார்த்தார். அதாவது நான் அடிபட்டு வந்து சுமார் மூன்றரை மணி நேரம் கழித்தே நான் மருத்துவரை பார்க்க முடிந்தது. இனிமேலும் அங்கிருந்தால் நல்லதல்ல என்று என் தம்பி என்னை அங்கிருந்து சிதம்பரத்தில் ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்து குணப்படுத்தினான். இதனை எதற்கு சொல்ல வருகிறேன் என்றால், மருத்துவர்கள் தினமும் நோயாளிகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், அவர்களுக்கு இது பத்தோடு பதினொன்றாக தெரியலாம். ஆனால் நோயாளிக்கு எல்லாமே பயம், அவர்களது பயத்தைப் போக்கி அவர்களுக்கு தன்னம்பிக்கை அளிப்பதுதான் மருத்துவரின் முதல் செயல். ஆனால் மூன்றரை மணிநேரம் கழித்து மருத்துவர் வந்தால் எந்த நோயாளியும் கொஞ்சம் தடுமாறித்தான் போவான். எனக்குப் பரவாயில்லை. என் தம்பி உடனே வெளியில் அழைத்து வந்துவிட்டான். வசதியில்லாமல் அரசு மருத்துவமனையை நம்பி வருபவர்கள் என்ன செய்வார்கள்? மற்ற அரசு அதிகாரிகளைப்போல் மருத்துவர்களும் நடக்காமல் கொஞ்சமாவது உயிர் காக்கும் மருத்துவத்திற்கு உண்மையாக நடப்பது நலம்.
$$$$$
உள்ளாட்சித் தேர்தல்கள் ஒருவழியாக எந்த கலவரமும் இல்லாமல் நடந்து முடிந்தது. வேட்பாளர்கள் வாக்காளர் பட்டியலைக் கையில் வைத்துக் கொண்டு வாக்காளர்கள் வெளியூரில் இருந்தாலும் அவர்களை அழைத்து வந்து ஓட்டு போட வைத்ததை பார்க்க முடிந்தது. அதுபோல் இந்த தேர்தலில்தான் நான் முதன்முதலில் வாக்காளர்களுக்கு பணம் அளிப்பதை நேரில் பார்த்தேன். வாக்காளர்கள் காலை முதலே வரிசையில் நின்று வாக்களித்தார்கள். நான் 10 மணிக்கு வாக்களிக்க செல்லும்போதே எனது வார்டில் 225 பேர் வாக்களித்திருந்தார்கள். இறுதியாக சேத்தியாத்தோப்பில் சுமார் 79 விழுக்காடு வாக்குகள் பதிவானதாகியிருந்தது. அதுபோல ஆரம்பம் முதலே இளஞ்செழியன் வெல்வார் என்பது ஏறக்குறைய ஊரறிந்த ரகசியமாகவே இருந்தது. மற்ற வேட்பாளர்களும் ஓட்டு கேட்பதில் அவ்வளவு விருப்பம் இல்லாததுபோலவே நடந்து கொண்டார்கள்.
$$$$$
இந்த ஆண்டு தீபாவளி மழையால் பிசுபிசுத்துப் போனது. குழந்தைகள்தான் வாங்கி வைத்திருந்த வெடிகளை வெடிக்க முடியாமல் மழையையும், வெடியையும் மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
$$$$$
சென்ற ஆண்டு தமிழகத்தில்தான் தற்கொலைகள் அதிகம் என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் மட்டும் சென்ற ஆண்டு 16561 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதாவது ஒரு நாளைக்கு 46 பேர். ஒரு மணி நேரத்திற்கு ஏறக்குறைய 2 பேர். அதில் பெரும்பாலானவர்கள் இளம்வயதினர் என்பதுதான் வருத்தப்படும் செய்தி. இப்போதுள்ள தலைமுறைக்கு எதையும் தாங்கும் மன உறுதி குறைந்து கொண்டிருக்கிறதோ என்று யோசிக்க வைக்கிறது இந்த தற்கொலைகள். படிப்பில் மதிப்பெண் குறைந்து ஆசிரியர் கண்டித்தால் கூட தற்கொலைக்கு செல்லும் மாணவர்கள் இருக்கின்றனர். வகுப்பில் கவுன்சிலிங் வகுப்பையும் வாரம் ஒருமுறையாவது நடத்துவது மாணவர்களின் மனத்தினைப் பாதுகாக்கும்.
$$$$$
தேர்தலன்றும், வாக்கு எண்ணிக்கையின்போதும் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்:









0 comments:
கருத்துரையிடுக