செவ்வாய், 11 அக்டோபர், 2011

இப்படியும் சில மனிதர்கள் – 4

அவனைப் பார்த்தாலே எனக்கு குமட்டிக் கொண்டு வருகிறது. வந்து உட்கார்ந்து கொண்டு என்னை எந்த வேலையும் செய்ய விடமாட்டான். என்ன வேண்டும் என்று கேட்டால் கூட ஒன்றும் சொல்ல மாட்டான். ‘நீங்க உங்க வேலையைப் பாருங்க. நான் சும்மாதான் வந்தேன் என்பான். அவன் உட்கார்ந்திருந்தால் எனக்கு எந்த வேலையும் ஓடாது. என்னையும் என் கையையும் மட்டுமே உற்றுப் பார்த்துக் கொண்டே இருப்பான்.


ஒருநாள் யாரும் இல்லாத நேரம் பார்த்து “சார். உங்கள மாதிரி நானும் கம்ப்யூட்டர் கத்துக்கணும், எனக்கு ஒரு கம்ப்யூட்டர் வாங்கிக் கொடுங்க. அது எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல என்றான். ஆளைப் பார்த்தாலே அடுத்தவேளை உணவுக்கே வழியில்லாதவன் மாதிரி இருக்கும் அவன் இப்படி சொல்வதைக் கேட்டு சிரிப்பதா அழுவதா என்றே தெரியாது.


“அதெல்லாம் 25000 ரூபாய் வரைக்கும் ஆகும். அவ்வளவு பணம் வச்சிருக்கிங்களா? என்றேன்.


“எவ்வளவு ஆனாலும் பரவாயில்ல சார். உங்க மாதிரியே நானும் கம்ப்யூட்டர் கத்துக்கணும். உங்களை மாதிரி ஸ்பீடா டைப் பண்ணனும். உங்க கை கம்ப்யூட்டர்ல பூந்து விளையாடறத பாக்கும்போது எனக்கும் உங்கள மாதிரி ஆகணும்னு ஆசையா இருக்கு.


‘அது சரி. என்ன படிச்சிருக்கீங்க? என்று வெறுப்புடன் கேட்டேன்.


“நான் எட்டாவது வரைக்கும் படிச்சிருக்கேன் சார்


“சரி. நீங்க கம்ப்யூட்டர் வாங்க வேணாம். மாசாமாசம் பணம் கட்டிட்டு இங்க வந்து கத்துக்கோங்க


“இல்ல சார். நானும் உங்களை மாதிரி 24 மணி நேரமும் கம்ப்யூட்டர்லேயே உக்கார்ந்திருக்கணும். அதுக்கு சொந்தமா கம்ப்யூட்டர் இருந்தாதான் முடியும்


அதற்குள் எனக்கு வேலை வந்துவிட அதுபோலவே அவன் உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதும் நான் வேலை செய்வதுமாய் இருந்தேன். இவனை என்ன செய்வது? இவனுடைய ஆசை எல்லாம் சரிதான். ஆனால் இவனுடைய ஏழ்மை தன்மைக்கு இதெல்லாம் சாத்தியமா? அவன் துவைத்த துணியை போட்டுக்கூட நான் பார்த்ததில்லை. எப்போதும் அழுக்கான ஒரு மேல்சட்டையும், ஒரு கைலியும்தான் அவனுடைய உடுப்பு.


அன்றும் அப்படித்தான். எனக்கு பயங்கர வேலை. சாப்பிடக்கூட செல்ல முடியவில்லை. என் நிறுவனத்தைச் சுற்றி பயங்கரக் கூட்டம். அப்போதும் அப்படியே வந்து உட்கார்ந்தான். எனக்கோ எரிச்சலான எரிச்சல். “நீங்க கிளம்புங்க. வேலை டைட்டா இருக்கு. அப்புறம் பாக்கலாம் என்றேன்.


“சரி சார் என்று சொன்னவன் வெளியே சென்று உட்கார்ந்துகொண்டான். என் வேலை முடியவே நான்கு மணிக்கு மேல் ஆனது. அதுவரை அங்கேயே உட்கார்ந்து கொண்டேயிருந்தான். இவனை என்னதான் செய்வது? வெட்டிப் பேச்சு பேசி என்னுடைய வேலையையும் கெடுத்துக் கொண்டு இப்படி செய்துகொண்டு இருக்கிறான்.


அவனைக் கூப்பிட்டேன்.


‘என்னதான் வேணும் உங்களுக்கு? என்றேன்.


‘சும்மாதான் சார். உங்கள பாத்துட்டுப் போகலாம்னு வந்தேன். சரி. நீங்க இன்னும் சாப்பிடல. சாப்பிடக் கிளம்புங்க. நான் அப்புறம் வரேன்என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.


இன்னொரு முறை வந்தான் என்றால் நன்றாக திட்டி அனுப்பிவிட வேண்டும் என்ற முடிவோடு அன்று கிளம்பினேன். அன்றிலிருந்து ஒரு வாரகாலம் அவனைப் பார்க்க முடியவில்லை. நானும் என் வேலை பளுவில் மறந்துவிட்டேன்.


ஒருநாள் வந்தான்.


“வணக்கம் சார்!


திரும்பி அவனைப் பார்த்து விட்டு நான் என்னுடைய வேலையைப் பார்க்கத் திரும்பிக் கொண்டேன். இன்று அவனை திட்டி அனுப்பிடவேண்டும் என்று எண்ணிக்கொண்டு வேலையை முடித்தேன். அவனைப் பார்த்தேன். அவன் பையினுள் கைநுழைத்து ஒரு புதுசட்டையை எடுத்துக் கொடுத்தான்.


“என்ன இது?


“சட்டை சார். உங்களுக்குத்தான் வாங்கிக்குங்க என்றான்.


சட்டையின் விலை 1900 ரூபாய் என்று போட்டிருந்தது. “எதுக்கு இது? எனக்கு இதெல்லாம் வேண்டாம். எடுத்துட்டுப் போங்க என்றேன்.


“இல்லை சார். உங்களுக்கு நான் ஏதாவது வாங்கித் தரணும்னு ரொம்ப நாளா கஷ்டப்பட்டு இந்தப் பணத்தை சேர்த்து வச்சிருந்தேன் சார். என்னை எங்க வீட்டுலேயே யாரும் மதிக்கிறதில்ல சார். சாப்பாடு கூட சரியா போடமாட்டாங்க. எனக்கு என்ன வேணும்னு கூட கேக்கறதுக்கு ஆள் இல்லை சார். அப்பெல்லாம் உங்கள வந்து பாத்தேன்னா எனக்கு பசியே தெரியாது. ஏன்னா எங்கிட்ட முகம் சுளிக்காம பேசற ஒரே ஆள் நீங்கதான். உங்கள பாக்கும்போதெல்லாம் எனக்கும் ஏதாவது ஒரு திறமையை வளர்த்துக்கணும்னு ரொம்ப ரொம்ப ஆசையா இருக்குது சார். இவ்வளவு நாளா என்னை யாரும் மதிக்கலைன்னு மட்டும்தான் எனக்கு தோணுமே தவிர அவங்க மதிக்கிற மாதிரி நம்ம வாழ்க்கையை மாத்திக்கணும்னு இதுவரைக்கும் எனக்கு தோணுணதில்லை. உங்கள பாத்தப் பிறகுதான் எனக்கு அந்த எண்ணமே வந்தது. நீங்களும் என்னை மாதிரி கஷ்டப்படுற குடும்பத்துலேர்ந்து வந்திருந்தாலும் சளைக்காம முயற்சி பண்ணி இன்னிக்கு எல்லோரும் மதிக்கிற ஒரு இடத்துல இருக்கீங்க. உங்கள மாதிரி நானும் ஆகணும் சார். நிச்சயம் ஒருநாள் ஆவேன் சார். என்றான்.


அவனைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். அழுகையும் கண்களைத் தொட்டது. அவன் பார்க்காமல் இருப்பதற்காக முகத்தைத் திருப்பிக்கொண்டேன். என்னால் தன்னுடைய வாழ்க்கையை திருத்த அவன் நினைத்திருக்கிறான். அவனைப் பார்த்தாலே நான் வெறுத்துக் கொண்டே இருந்திருக்கிறேன். இப்போதும் என்னுடைய மனதில் என்ன இருந்தது என்று அவனுக்குத் தெரியவில்லை. அவனுடைய வாழ்க்கையை உயர்த்த அவனுக்குத் தோன்றிய எண்ணத்திற்கு நான்தான் காரணம் என்று பெருமை கொள்வதா? அவனை இதுநாள் வரை இப்படி எண்ணிக் கொண்டிருந்ததற்காக சிறுமை அடைவதா?

9 comments:

masiyaan சொன்னது…

well your writting style is very good continue

arunvetrivel சொன்னது…

மிகவும் அருமையான மனதை தொட்ட கதை இது.
பகிர்ந்ததிற்க்கு நன்றி நன்பரே.,

arunvetrivel சொன்னது…

மிகவும் அருமையான மனதை தொட்ட கதை இது.
பகிர்ந்ததிற்க்கு நன்றி நன்பரே.

Kannan சொன்னது…

மிகவும் அருமையான கதை.....
பகிர்வுக்கு நன்றி.......

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

இராஜராஜேஸ்வரி சொன்னது…

பகிர்வுக்கு நன்றி.......

ravichandran சொன்னது…

very fine; please see my website; www.ravichainthrin.com

சுதந்திரன் சொன்னது…

தங்கள் கருத்துக்களை தெரிவித்து என்னை ஊக்குவிக்கும் அனைத்து நல் இதயங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்...!

Girikumar S சொன்னது…

A NEATLY WRITTEN AND PRESENTED STORY OR IS IT REAL?

சுதந்திரன் சொன்னது…

உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. இது உண்மைக்கதை அல்ல. நான் சந்திக்கும் சில மனிதர்களின் ஏதாவது ஒரு குணத்தைக் கருவாகக் கொண்டு என் கற்பனையைக் கலந்து எழுதிய கதையே இது. இதில் 75% கற்பனையே. மீதமுள்ள 25% என்பது அந்த மனிதரின் குணநலன். “இப்படியும் சில மனிதர்கள்” அனைத்துப் பாகங்களுக்கும் இது பொருந்தும்.