கடந்த டிசம்பர் 30ம் தேதி கடலூர் மாவட்டத்தையே ‘தானே’ புயல் புரட்டிப்போட்டது. பெரும்பாலான மரங்களும், மின்கம்பங்களும் வேரோடு சாய்ந்தன. ஆஸ்பெட்டாஸ் ஷீட்டால் கூரை வேயப்பட்ட பெரும்பாலான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் அனைத்தும் கூரை இழந்தன. சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மேற்கூரை ஏறக்குறைய 60 விழுக்காடு விழுந்துவிட்டது.
இந்த நிலையில் நிவாரணப் பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது. இதுவரை மக்களை அரசுத்துறை சார்ந்த எவரும் வந்து பார்க்கவில்லை. சேத்தியாத்தோப்பை பொறுத்தவரை வெளி உதவி எதுவுமின்றி மக்களே பெரும்பாலும் மரங்களையும் வீடுகளையும் சரிசெய்து கொண்டிருக்கிறார்கள். வசதியில்லாமல் தினக்கூலி சென்று வருபவர்கள் உணவிற்கு என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை.
மின்சாரம் இந்த நிமிடம் வரை முறைபடுத்தப்படவில்லை. ஊரில் பாதி அளவிற்கே இதுவரை மின்சாரம் வழங்கப்பட்டிருக்கிறது. மீதமுள்ள இடங்களுக்கு இன்னும் இரண்டு மூன்று நாட்கள் வரை ஆகும் என்று தெரிகிறது. இதைத் தவிர சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கு எப்போது மின்சாரம் தருவார்கள் என்று இதுவரை தெரியப்படுத்தப்படவில்லை. இதைவிடக் கொடுமை நேற்று வரை நெய்வேலிப் பகுதிகளான இந்திரா நகர் சுற்றியுள்ள பகுதிகளில் மின்வாரியம் எந்த வேலையும் ஆரம்பிக்கவில்லை. அறுந்து தொங்கிய கம்பிகள் அப்படியே தொங்கிக் கொண்டிருக்கின்றன.